சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்ட விழா; முருகனின் திருமேனி வியர்வை சிந்தும் காட்சி!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்ட விழா; முருகனின் திருமேனி வியர்வை சிந்தும் காட்சி!
Sikkal Singaravelan Temple: கந்தசஷ்டி விழாவையொட்டி பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்: சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோயில் புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது. நவநீதேசுவரர் திருக்கோயிலில் சிங்கார வேலவர் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக வரலாறு கூறுகிறது.
சூரனை சம்ஹாரம் செய்ய வேல்நெடுங்கண்ணியிடம் சிக்கல் சிங்காரவேலவர் வேல் வாங்கும் நிகழ்வின்போது, முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும். உலகிலேயே எங்கும் இல்லாத இந்த அற்புத நிகழ்வினைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனிடையே, கந்த சஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி துவங்கிய நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சிங்காரவேலவர் பவள ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் என பல்வேறு வகையான வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. தெய்வானை, வள்ளி சமேத சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் தீப தூப ஆராதனைகளுக்குப் பிறகு, அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர், கோயிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது.
இரவில், தேரிலிருந்து இறங்கி சிங்காரவேலவர் கோயிலுக்குள் சென்று, அன்னை வேல்நெடுங்கண்ணியை வணங்கிய பின்னர், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக சக்திவேலை வாங்கினார். அப்போது வீர ஆவேசத்தில் சிங்காரவேலவரின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பும் காட்சியைக் காண பக்தர்களை அலைமோதினர்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 12 மணியளவில் சிங்காரவேலவருக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது. பின் தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில், இன்று (நவ.18) இரவு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
வேல் வாங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் 5 டிஎஸ்பி, 15 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
