ETV Bharat / state

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் - பக்தர்கள் பரவசம்

author img

By

Published : Jun 12, 2022, 4:52 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று(ஜூன் 12) வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனை தரிசித்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் - பக்தர்கள் பரவசம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் - பக்தர்கள் பரவசம்

மதுரை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 'முதல்படை வீடு' எனும் பெருமை பெற்றது, திருப்பரங்குன்றம். இந்த கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் 'வைகாசி விசாகத் திருவிழா' மிகவும் புகழ்பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா கட்டுப்பாடுகளால் உள்திருவிழாவாக நடைபெற்ற விசாகத் திருவிழா, இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியளித்துள்ளது.

வைகாசி விசாகத்திருவிழா கடந்த 3ஆம் தேதி, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்குப் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விசாகத்திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். சண்முகர் சந்நிதியில் காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து கட்டளைதாரர் பாலாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் 'விசாக கொறடு' மண்டபத்தில் காலை 6 மணிக்கு எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காகக் கொண்டு வந்த பால்குடங்கள் மூலம் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, 'சிவகங்கை', 'விருதுநகர்', தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி, பறவைக் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் சந்நிதி தெரு, பெரியரத வீதி எங்கும் பால்காவடி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் 16 கால்மண்டபம், சந்நிதி தெரு, பெரிய ரத வீதி மற்றும் கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு கோயிலுக்குள் ஆங்காங்கே மின் விசிறி, ஏர்கூலர் வைக்கப்பட்டிருந்தது.

மேலும், பாலாபிஷேகம் செய்யும் பாலானது, கோயிலின் சஷ்டி மண்டபம் வழியாக வெளியே பைப் லைன் அமைக்கப்பட்டு, அங்கு பக்தர்கள் பால் பிடித்து செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. விசாகத்திருவிழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் - பக்தர்கள் பரவசம்

மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. சுகாதாரத்துறையினர் முதலுதவி மையங்களை அமைத்து பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: மகன் கண் முன்னே விபத்தில் உயிரிழந்த தாய் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.