ETV Bharat / state

மதுரை சுங்கச்சாவடிக்குள் தாறுமாறாக மோதிய லாரி.. ஊழியர் பலி; 3 பேர் காயம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி!

author img

By

Published : Jul 31, 2023, 11:11 AM IST

மதுரை வண்டியூர் அருகே சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை சுங்கச்சாவடிக்குள் தாறுமாறாக ஓடியதில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

TamilNadu
மதுரை

சுங்கச்சாவடிக்குள் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

மதுரை: மதுரை பாண்டிகோவில் ரிங்ரோட்டில் வண்டியூர் அருகே மஸ்தான்பட்டி சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் நேற்று(ஜூலை 30) ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக சென்றன.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கேரளா நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 30 டன் அரிசியை ஏற்றிச் சென்ற அந்த லாரியை பாலகிருஷ்ணன் (41) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த சரக்கு லாரி மதுரை பாண்டிகோயில் அருகே சென்றபோது திடீரென பிரேக் வேலை செய்யவில்லை என தெரிகிறது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாடின்றி லாரி தாறுமாறாக ஓடியது. ஓட்டுநர் லாரியை நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை.

இதனால், அதிக வேகத்தில் தாறுமாறாக ஓடிய லாரி சுங்கச்சாவடிக்குள் புகுந்தது. சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்றிருந்த கார்கள் மீது லாரி மோதியது. லாரியை தடுக்க முயற்சித்த சுங்கச்சாவடி ஊழியர் மீதும் லாரி மோதியது. இந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் சுங்கசாவடியை துவம்சம் செய்து கோர விபத்தை ஏற்படுத்திவிட்டது.

லாரி மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கார்களில் இருந்த மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ஊழியர் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தரப்பில், "பிரேக் செயலிழந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுங்கச்சாவடிக்கு வருவதற்கு முன்பாக ஓட்டுநர் லாரியை நிறுத்த முயற்சித்துள்ளார். சாலையோரம் மரத்தில் மோதி வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது, அப்பகுதிகளில் உணவகங்கள் இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதேபோல் சுங்கச்சாவடியிலிருந்து வேறு திசைக்கு வாகனத்தை திருப்ப முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியர் சதீஷ்குமார் உயிரிழந்துள்ளார். சதீஷ்குமார் மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் காரில் இருந்த இரண்டு பயணிகள், பெண் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர்" என்று கூறினர்.

இதையும் படிங்க: மது போதையில் ரோந்து வாகனத்தை முட்டித் தூக்கிய இளைஞர்... போதையை மறைக்க போலீசாருடன் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.