ETV Bharat / state

குமார வயலூர் கோவில் அர்ச்சகர் நியமனம் ரத்து.. தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை!

author img

By

Published : Mar 8, 2023, 2:38 PM IST

திருச்சி குமாரவயலூர் முருகன் கோவில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு எனவும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

TN government file a review petition regarding Madurai High Court annulment of Kumaravayalur temple priest appointment
குமார வயலூர் கோவில் அர்ச்சகர் நியமனத்தை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

மதுரை: திருச்சி குமார வயலூர் முருகன் கோவில் அனைத்து சாதி அர்ச்சகர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்ட பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோரது நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது. இதனை அடுத்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் மீண்டும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. 50 ஆண்டுக்கால கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் நிர்வாகம் நியமித்த, பிராமணர் அல்லாத பிரபு, ஜெயபாலன் ஆகிய இந்து சைவ அர்ச்சகர்களின் பணிநியமன உத்தரவுகள் மதுரை உயர்நீதிமன்றத்தால் பிப்.24,2023 தீர்ப்பின்படி ரத்து செய்யப்பட்டு, பிராமண உட்சாதியினரான கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிராமண சாதி உட்பிரிவுகளான ஆதிசைவர், சிவாச்சாரியார்கள், குருக்கள் மட்டுமே, காமிக ஆகம முறையிலான திருச்சி வயலூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக முடியும், மற்ற இந்துக்கள் அர்ச்சகராக முடியாது, என்பதே இத்தீர்ப்பின் சாரம். மார்ச்,3,2023-அன்று மதுரை உயர்நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட இத்தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள், ஆதித்யன், நாரயண தீட்சிதலு, காசிவிஸ்வநாதர், சபரிமலை ஆகிய தீர்ப்புகளுக்கு எதிரானது.

வழக்கைத் தொடுத்த மனுதாரர்கள் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் தாங்கள் மேற்குறிப்பிட்ட ஆதிசைவர் உள்ளிட்ட உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணத்தை, அர்ச்சகர் பணிக்கு மனுச் செய்யும்போதோ, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திலோ சமர்ப்பிக்காத போது, கார்த்திக்கும், பரமேஸ்வரனும் ஆதிசைவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கு நீதிமன்றம் எப்படி வந்தது? என்பதற்கான விளக்கம் தீர்ப்பில் இல்லை. தாங்கள் ஆதி சைவர்களா? சிவாச்சாரியார்களா? குருக்களா? என்று கூட தங்களது மனுவில் மனுதாரர்கள் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் கேட்டபோது மூன்று பிரிவுகளும் ஒன்றுதான் ( denominational brahmins) என்று மழுப்பினர். தங்கள் கூற்றுக்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை.

திருச்சி வயலூர் முருகன் கோயில் பழக்க, வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்த பிராமண அர்ச்சகர்கள், அதற்கும் கூட எந்தவித ஆதாரத்தையும் தரவில்லை. பழக்கம், வழக்கம் (custom and usage ) என்பதைச் சாட்சியங்கள் வழியே, உரிமையியல் நீதிமன்றத்தில் தான் நிரூபணம் செய்ய முடியும். மனுதாரர்கள் குறிப்பிடும் பழக்க, வழக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்காதபோது, உயர்நீதிமன்றம் இதுதான் பழக்கம் என்ற முடிவிற்கு வர சட்ட அடிப்படை இல்லை.

சைவக் கோயில்களில் வைணவர்களையோ, சைவ மரபில் நம்பிக்கை அற்றவர்களையோ அர்ச்சகராக நியமிக்க யாரும் கோரவில்லை. இந்தியச் சாட்சிய சட்டம் பிரிவு.106-ன் படி, வழக்குத் தொடுத்தவர் தான், தனது கூற்றை நிரூபிப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வழக்கில், நம்பிக்கை என்பதைத் தவிர எந்த ஆவணமும் மனுதாரர்களால் சமர்ப்பிக்கப்படவில்லை.

வயலூர் முருகன் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் இருவரும் தாங்கள் சைவ மரபைப் பின்பற்றும், ஆதிசைவ மத உட்பிரிவினர் என்று மிகத் தெளிவாக பதில் மனுத் தாக்கல் செய்துள்ளபோது, அது குறித்து தீர்ப்பு மவுனம் சாதிக்கிறது. ஒரு தரப்பினரின் வாதத்தை நீதிபதி ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்; அவர்களின் முக்கிய வாதத்தைக் குறிப்பிட்டு, அதனை ஏற்க இயலாமைக்கான காரணத்தையும் தீர்ப்பு தெரிவிக்க வேண்டும். நீதி பரிபாலனத்தின் அடிப்படையான இந்த நெறியை இத்தீர்ப்பு மீறியிருக்கிறது.

இவை தவிர மிக முக்கியமாகச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பில், ஆகமக் கோயில்கள் எவை என்பதை முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்துள்ள நிலையில், வயலூர் முருகன் கோயில் ஆகமக் கோயில் என்று தற்போது எவ்வாறு முடிவு செய்ய இயலும்? ஒருவேளை இந்து சமய அறநிலையத்துறை வயலூர் முருகன் கோயில் ஆகமக் கோயில் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நீதிமன்றம் ஏற்குமா? ஆகமங்கள் நான்கு வர்ணங்கள் குறித்து மட்டுமே பேசும்போது, வர்ணத்திற்கு வெளியே உள்ள பஞ்சமர்கள் எனப்படும் பட்டியல் சமூகத்தினர் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலை என்ன? அவர்கள் இந்துக்கள் இல்லையா? கோயிலில் பூஜை செய்யக் கூடாதா? பூஜை செய்தால் தீட்டாகிவிடுமா?

உச்சநீதிமன்றத்தின் 2015-ஆம் ஆண்டு ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்பு – ஆகமங்கள் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது; சாதி, பிறப்பின் அடிப்படையில் எவரும் அர்ச்சகர் உரிமை கோரமுடியாது என்று மிகத்தெளிவாகக் கூறி இருக்கும்போது, திருச்சி வயலூரில் உள்ள 5 பிராமண குடும்பங்கள் மட்டும் பிறப்பு, சாதி அடிப்படையில் அர்ச்சகர் உரிமை கோருவதை நீதிபதி எப்படி ஏற்றுக் கொண்டார்?

அரசியல் சட்டம் பிரிவு 26-ன் படி, அரசு பொதுக் கோயில்களில், தனிமத உட்பிரிவினர் (denomination) என்று சொல்லி பிராமணர் உள்ளிட்ட எந்த சாதியும் அர்ச்சகர் நியமன உரிமை கோரமுடியாது. ஒரு மத உட்பிரிவினர் (denomination) சொந்தமாகக் கோயில் கட்டி, நிர்வாகம் செய்து வருவதற்கே (establish and maintain) பிரிவு 26 பொருந்தும்.

உதாரணத்திற்கு ஜக்கிவாசுதேவ், ஒரு கோயில் கட்டி, தனி மத உட்பிரிவு என நிரூபித்து, அக்கோயிலில் அந்த மதப்பிரிவின் கொள்கைப்படி, அர்ச்சகர் நியமிக்கலாம். அந்த தனியார் கோயிலும், பொதுமக்கள் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டால் அர்ச்சகர் நியமனம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செய்ய இயலும், திருச்சி வயலூர் முருகன் கோயிலை மனுதாரர்கள் சார்ந்த பிராமண சமூகம் உருவாக்கி, நிர்வாகம் செய்யாதபோது, பிரிவு 26- ன் கீழ் எப்படி உரிமை கோர முடியும்?

சபரிமலை தீர்ப்பின்படி புனிதம் - தீட்டு என்று ஒருவர் ஒதுக்கப்பட்டால் அது தீண்டாமைதான். மொத்தத்தில் அரசு பொதுக்கோயிலில் கருவறை தீண்டாமை மீண்டும் ஆழமாய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகமம், வேதம், மந்திரங்கள் கற்று, முறையாகத் தேர்வான அர்ச்சகர்களின் பணி உரிமை, பிறப்பின் அடிப்படையில் பறிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் விழுமியங்களை (constitutional morality) அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறான (basic structure) சமத்துவ கோட்பாட்டை மீறுகிறது.

எனவே தமிழக அரசு, அரசியல் சட்ட விரோத இத்தீர்ப்பிற்கு எதிராக, மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வதுடன், இத்தீர்ப்பிற்கு மூலமாய் உள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பிற்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து சாதி இந்துக்களையும் அர்ச்சகர் ஆக்க , கோயிலில் சமத்துவம் நிலவ, 2006-ஆம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்து சட்டமாகாமல் போன இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55(2) – ன் கீழான சட்டத் திருத்தத்தை - குறிப்பாகப் பழக்கம், வழக்கம், மரபு, சாதி, பிறப்பு அடிப்படையிலான மத, சாதி உட்பிரிவின் கீழ் அரசு பொதுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் கோர முடியாது என மீண்டும் கொண்டு வந்து அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை, கோயில்களில் அரசியல் சட்ட சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும்.

அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிவரும் நாங்கள் இந்து சமய அறநிலையத்துறையில் ஆர்எஸ்எஸ் - பாஜக - பிராமணிய சிந்தனைப் போக்குள்ள சில சட்டத்துறை அதிகாரிகளின் ஊடுருவலை மிகவும் ஆபத்தான போக்காகப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் தமிழக அரசால் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் நியமனங்களும் ரத்தாகும். எனவே தமிழக முதல்வர் உடனே இதில் நேரடியாகத் தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி.. மதுரை பெண் காவல் ஆய்வாளர் தங்கம்,வெள்ளி வென்று சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.