ETV Bharat / state

நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம்; மனுவை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வாதம் - அக்.20-இல் தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 7:10 AM IST

Meomax issue: நியோமேக்ஸ் தொடர்பான வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்புக்காக வருகிற 20ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக பாஜக பிரமுகர் வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர்.

நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி, மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட் பெற்று, அதனை விற்பனை செய்து முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்து வருகின்றோம்.

இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன.

எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரி செய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி, “நியோமாக்ஸ் நிறுவனம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நிலத்தை பங்கீடு செய்வது குறித்து மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனமே உத்தேசமாகத்தான் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.

மேலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி கமிட்டி அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரணையைப் பாதிக்கும். கடந்த பல ஆண்டுகளாக இது போல் நிதி நிறுவன மோசடி குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணை நிலுவையில் உள்ளது.

சில குழுக்களில் விசாரணை நீதிபதிகள், விசாரணையில் இருந்து விலகி விட்டனர். மேலும், நியோமேக்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமான வாக்குமூலத்தில் 32,048 முதலீட்டாளர்கள் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இதனை அடிப்படையாகக் கொண்டு சராசரியாக கணக்கிட்டால் 32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு 49 கோடியே 72 லட்சம் சதுர அடி தேவைப்படுகிறது.

ஆனால் அவர்கள் டி.டி.சி.பி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளது. மேலும், இப்போது அவர்களிடம் இருக்கும் நிலத்தின் அடிப்படையில் 32,048 முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பிரித்து தருவதாக சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சராசரியாக பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 697 சதுர அடிதான் கொடுக்க முடியும். எனவே இது சாத்தியமற்றது. எனவே, நியோமாக்ஸ் தரப்பில் தாக்கல் செய்த விசாரணை குழு அமைப்பது குறித்த மனு தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.

இதேபோல் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் தரப்பில், வழக்கறிஞர் தரப்பில் நியோமேக்ஸ் நிறுவனம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு கேட்பது நீதிமன்றத்தை திசை திருப்பும் வேலை என்றும், எனவே இதனை அனுமதிக்க கூடாது எனவும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, தீர்ப்புக்காக 20ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: தாயாருக்கான ஓய்வூதியத்தை கேட்டு மகன் நேரடியாக வழக்கு தொடர முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.