ETV Bharat / state

நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் தகனம்!

author img

By

Published : Sep 12, 2020, 4:18 PM IST

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் தத்தனேரி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

மாணவி
மாணவி

மதுரை தல்லாகுளத்திலுள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா (19) வசித்துவந்தார். இவரது தந்தை முருக சுந்தரம் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், தேர்வு அச்சத்தால் இன்று (செப். 12) அதிகாலை வீட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழப்பதற்கு முன்னதாக மாணவி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனக்காக அளித்த பங்களிப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் இறுதியாக...’என்னை மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்’ எனக் குறிப்பிட்டிருந்தது மாணவியின் உடைந்த உள்ளத்தை நமக்கு பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.

மாணவி ஜோதி கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின் நீட் தேர்வு எழுதிய நிலையில் மதிப்பெண் குறைந்ததால் தனியார் நீட் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டிற்கான தேர்வு எழுதுவதற்காக படித்துவந்தார். நாளை (செப்டம்பர் 12) நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்காக படித்துகொண்டிருந்த மாணவி துர்கா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மாணவியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

பின்னர் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர்.சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் நீட் தேர்வை கண்டித்து மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவி துர்காவின் இறுதி சடங்கு
உயிரிழந்த மாணவி துர்காவின் இறுதி சடங்கு

இதனிடயே, மாணவியின் உடல் தத்தனேரி மின்மயானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, தத்தனேரி மயானத்தில் வைக்கப்பட்ட மாணவியின் உடலுக்கு அமமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தியதோடு நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மதுரையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.