ETV Bharat / state

எம்.பி., தொகுதி நிதியிலிருந்து தடுப்பூசி செலுத்த நிதி ஒதுக்கீடு - சு வெங்கடேசன் கோரிக்கை

author img

By

Published : May 13, 2021, 1:45 PM IST

மதுரை: தனது தொகுதி நிதியிலிருந்து மதுரை இளைஞர்கள் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி ஒதுக்குவதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்கும் படி மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

venkatesan
வெங்கடேசன் கோரிக்கை

மதுரையில் 30 ஆயிரம் இளைஞர்கள் தடுப்பூசி போடுக்கொள்வதற்கு தன்னுடைய எம்.பி., தொகுதி நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்குவதாகவும் அதற்கு ஒப்புதல் வழங்கும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, அவர் மத்திய சுகாதார செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18-45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக் கூடிய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.

ஒன்றிய, மாநில அரசின் பணிகளில் உதவ, முன்னெச்சரிக்கை மற்றும் கோவிட் வழிகாட்டல்கள் குறித்த செய்திகளை மக்களிடம் சேர்க்க, விழிப்புணர்வை உருவாக்க என்னுடைய மதுரை மக்களவைத் தொகுதியில் தன்னார்வமுள்ள இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

இந்த இளைஞர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பது, உணவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டல், நிலைமையை கண்காணிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்புகளைப் பலப்படுத்துவது, எல்லோருக்கும் தடுப்பூசி ஆகியவற்றை உறுதி செய்வார்கள்.

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை எனது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு, எனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக முன்னுரிமை அளித்து வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் அவர்களை கோவிட் எதிர்ப்பு களப் பணியில் தன்னார்வலர்களாக எனது தொகுதியில் பயன்படுத்த முடியும்.

s venkatesan
சு வெங்கடேசன் கோரிக்கை கடிதம் - 2

"எல்லோருக்கும் இலவச தடுப்பூசி" என்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டு ஒட்டு மொத்த மக்கள் பயன் பெற வேண்டும். தன்னார்வ இளைஞர் 30,000 பேருக்கு (ரூ 150 வீதம் ஒரு முறைக்கு) இரண்டு முறைக்கும் சேர்த்து எனது மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவேன். உங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் இத்தொகை அனுப்பப்படுவதை உறுதி செய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வேட்டையாடப்பட்ட தமிழர்களுக்கு வீட்டில் இருந்தே வீர வணக்கம் செலுத்துவோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.