ETV Bharat / state

’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால் சீரழிக்கப்படும் வைகை’ - சமூக ஆர்வலர்கள் கவலை!

author img

By

Published : Sep 12, 2021, 11:17 AM IST

மதுரையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால் வைகை ஆறு தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

madurai-smart-city-vaigai-road-pollute-vaigai-river
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால் சீரழிக்கப்படும் வைகை - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மதுரை மாநகரில் நடைபெற்று வருகின்றன. அதில், குறிப்பாக வைகை ஆற்றின் இரண்டு புறமும் குரு தியேட்டர் தொடங்கி வீரகனூர் வரை சற்றேறக்குறைய ஒன்பது கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலைப் பணிகள் தற்போது நடைபெறுகின்றன.

இந்தச் சாலை பணிகளின் காரணமாக வைகை ஆறு 100லிருந்து 200 அடி வரை சுருக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சாலை அமைப்பதற்காக ஆற்றின் இரண்டு புறமும் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் 20 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ளன. இதனால் இரண்டு கரைப் புறங்களிலும் தண்ணீர் ஊடுருவ வழி இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

madurai-smart-city-vaigai-road-pollute-vaigai-river
வைகை ஆற்றங்கரை

இந்நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக அங்கிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட சுமார் ஆறு டன் எடையுள்ள காங்கிரீட் பாளங்கள் அனைத்தும் வைகை கரை வழி சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வைகைநதி மக்கள் இயக்கத்தின் நிறுவனர் ராஜன் கூறுகையில், "மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்ட பழைய கான்கிரீட் பாளங்கள் அனைத்தையும் வைகை ஆற்றுக்குள் குழி தோண்டி ஆங்காங்கு கொட்டி வருகின்றனர்.

madurai-smart-city-vaigai-road-pollute-vaigai-river
ஆற்றங்கரையில் குவிக்கப்பட்டிருக்கும் கான்கீரிட் கழிவுகள்

அதேபோன்று ஆழ்வார்புரம் ஓபுளா படித்துறை தரைப்பாலம் இடிக்கப்பட்டு அதன் கழிவுகளையும் ஆற்றுக்குள்ளேயே மீண்டும் கொட்டி புதிய பாலம் ஒன்றை எழுப்பி வருகின்றனர்.

தற்போது, பாலம் உயர்த்தும் பணிகளின் காரணமாக இங்கு கொட்டப்படும் கழிவுகளால் அருகில் உள்ள தடுப்பணை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மதுரையின் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அதே போன்று கரை வழியாக நிலத்துக்குள் தண்ணீர் ஊடுருவ வழி இல்லாமல் வெள்ளம் பெருகும்போது தண்ணீர் ஊருக்குள் பாய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது" என்றார்.

madurai-smart-city-vaigai-road-pollute-vaigai-river
ஆற்றங்கரையில் குவிக்கப்பட்டிருக்கும் கான்கீரிட் கழிவுகள்

மற்றொரு சமூக ஆர்வலர் அறிவுச் செல்வம் இதுகுறித்து கூறுகையில், "வைகை ஆற்றின் இரண்டு புறமும் சாலை அமைப்பதற்காக காங்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தச் சுவரை எழுப்புவதற்கே நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். வைகையில் தண்ணீர் வரும்போது நிலத்திற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத வகையில் காங்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை கீழ் பாலம் மற்றும் ஆழ்வார்புரம் அருகே இரண்டு தடுப்பணைகளை உருவாக்கினார்கள். நகருக்குள் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காக இந்தத் தடுப்பணை உருவாக்கப்பட்டு இருப்பதற்காக சொன்னார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால் சீரழிக்கப்படும் வைகை - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஆனால், தற்போது அந்த நோக்கத்திற்கு முரணாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டடக் கழிவுகளை இரண்டு சாலையோரங்களிலும் ஏறக்குறைய 15 அடிக்கு கீழே புதைத்து அதற்கு மேல்தான் வைகை சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு உயரும்? மாநகராட்சி அலுவலர்கள் இது குறித்து சிந்தித்தார்களா எனத் தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்ற சூழலியல் கேடுகள் வைகை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாங்கள் கண்டிக்கிறோம். அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: சென்னை ஸ்மார்ட் சிட்டி- நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.