ETV Bharat / state

அழகுமுத்துகோன் சிலை வைத்தால் பிரச்னை - கபடி வீரரின் சிலை வைத்தால் பிரச்னை இல்லை

author img

By

Published : Sep 24, 2020, 7:27 PM IST

மதுரை: செல்லூரில் அழகுமுத்துக்கோன் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில், கபடி வீரன் சிலையை வைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

madurai high court bench
madurai high court bench

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், "மாவீரன் அழகுமுத்துக்கோன் முழு உருவ சிலையை மதுரை மாவட்டத்தில் வைக்க 2014ஆம் ஆண்டு அனுமதி கோரிய நிலையில் ஆறு இடங்களில் சிலை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால், 2016ஆம் ஆண்டு செல்லூர் பகுதியில் அழகுமுத்துகோன் சிலை வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சாதித் தலைவர், அரசியல் தலைவர் சிலைகளை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அழகுமுத்துகோன் சிலையை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அழகுமுத்துகோன் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு கபடி வீரரின் சிலை வைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளார்.

மேலும், கபடி வீரரின் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக செல்லூர் தத்தனேரி பாலம் இறங்கும் இடத்தில் கபடி வீரரின் சிலை வைப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அதே பகுதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் முழு உருவ சிலையை வைக்க அனுமதியளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் மதுரையில் பல இடங்களில் புராதன சின்னங்கள் சிலைகளாக வைக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே அப்பகுதியில் கபடி வீரனின் சிலை வைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி அப்பகுதியில் அரசியல் தலைவர்கள், சாதி தலைவர்கள் சிலை வைப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும், கபடி வீரரின் சிலையை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே அப்பகுதியில் கபடி வீரரின் சிலை வைக்க அனுமதியளித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "கேப்டன் சூப்பர் கவலை கொள்ள வேண்டாம்" பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.