ETV Bharat / state

அழகன்குளம் அகழ்வாராய்ச்சி மீண்டும் நடத்தப்படுமா? - அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை கேள்வி

author img

By

Published : Mar 14, 2023, 8:51 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற அகழாய்வுப் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க கோரிய வழக்கில், மீண்டும் அழகன்குளம் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா என தமிழ்நாடு அரசிடம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

அழகன்குளம் அகழ்வாராய்ச்சி மீண்டும் நடத்தப்படுமா? - அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை கேள்வி!
அழகன்குளம் அகழ்வாராய்ச்சி மீண்டும் நடத்தப்படுமா? - அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை கேள்வி!

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. சங்க காலங்களில் அழகன்குளம் கிராமம், கடல் வழி வணிக செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில், பல பழமையான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் கிராமிய எழுத்துக்கள், மணிகள், சோழ நாணயங்கள், ரோமன் உடனான வணிகம் ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் அழகன்குளம் கிராமத்தில் 1980 -1987, 1990 - 1991, 1993 - 1994, 1995 - 1996, 1997 - 1998, 2014 - 2015 மற்றும் 2017 என பல முறை அகழாய்வு நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற அகழாய்வு பொருட்களின் வயதை கண்டுபிடிக்கக் கூடிய கார்பன் முறை மூலம் சோதனை செய்ததில் கி.மு.345, கி.மு.268 மற்றும் கி.மு.232 போன்ற வருடங்களுக்கு முன்பு உள்ளது என தெரிய வருகிறது. அழகன்குளம் கிராமத்தை அகழாய்வு செய்தவன் மூலம் 4 விதமான நூற்றாண்டுகளில் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

எனவே, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், 1980 - 1987, 1990 - 1991, 1993 - 1994, 1995 - 1996, 1997 - 1998, 2014 - 2015 மற்றும் 2017 ஆகிய காலங்களில் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு உயர் நிதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை தரப்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையில், “1986 முதல் 1998ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2014 -2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் அறிக்கை தயார் செய்யப்பட்டு, நிபுணர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் ஒப்புதல் அளித்தவுடன், அழகன்குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும் அந்தப் பகுதியில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக இடம் ஒதுக்கப்பட்டு, வருவாய் துறையிடம் இருந்து தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, “அழகன்குளம் கிராமத்தில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா, இல்லையா என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனவே இது தொடர்பான வழக்கு விசாரணை, வருகிற ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ரூ.18.43 கோடி செலவில் கீழடி அருங்காட்சியகம் - திறந்துவைத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.