ETV Bharat / state

பழிக்குப் பழி கொலைகள்.. அரசியல்வாதி டூ ரவுடி.. வி.கே.குருசாமியின் பின்னனி என்ன?.. ஒரு பார்வை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 10:05 PM IST

மதுரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்தடுத்து பல்வேறு கொலைகளுக்குக் காரணமான திமுக பிரமுகர் வி.கே.குருசாமி, பெங்களூரில் அவரது எதிரிகளால் கொடூரமாக வெட்டப்பட்டு தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். இந்நிலையில் மதுரையில் அவரது அரசியல், சமூக வாழ்க்கை குறித்த ஒரு பார்வை.

Etv Bharat
Etv Bharat

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள கருத்தரிவான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. மதுரை அனுப்பானடி அருகேவுள்ள கீழ்மதுரையில் பிழைப்புக்காக தனது குடும்பத்துடன் குடியேறினார். இவரது மனைவி தங்க முனியம்மாள். மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அரசியலில் ஈடுபட்டு சமூக சேவை செய்ய வேண்டும் என்பதுதான் வி.கே.குருசாமியின் விருப்பமாக இருந்தது. ஆனால், விதி அவரை பழிக்குப் பழி கொலை செய்யும் ரவுடியாக மாற்றிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், வி.கே.குருசாமியும் அவரது அரசியல் எதிரியாகக் கருதப்படும் அதிமுகவைக் சேர்ந்த ராஜபாண்டியும் தூரத்து உறவினர்கள் மட்டுமன்றி, சொந்த ஊர்க்காரர்களும்கூட. தொடக்கத்தில் வி.கே.குருசாமி, சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார். ஆனால், அரசியலில் நுழைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமே அவருக்கு பிரதானமாக இருந்து வந்தது.

இந்நிலையில்தான் கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது தன்னுடைய மக்கள் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு மதுரை மாநகர் பகுதியிலுள்ள காமராஜபுரம் இந்திரா நகர் வார்டில் கவுன்சிலர் பதவிக்கு நின்று சுயேட்சையாக வெற்றி பெற்றார். அந்த குறிப்பிட்ட பகுதியில் தற்போதும் அவருக்கு மக்கள் செல்வாக்கு உண்டு. இதற்கிடையே கடந்த 2003ஆம் ஆண்டு திமுக-வில் தன்னை இணைத்துக் கொள்கிறார். வி.கே.குருசாமியின் மக்கள் செல்வாக்கு காரணமாக கட்சியிலும் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்துகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான ராஜபாண்டியோடு, வி.கே.குருசாமிக்கு அரசியல் பகை உருவாகிறது. அரசியல் தொடர்பான இந்த முரண் கொஞ்சம் கொஞ்சமாய் முற்றத் தொடங்கி கோயில் திருவிழாவில், சுவரொட்டிகள் ஒட்டுவதில், பரப்புரை செய்வதில் என பல இடங்களில் பிரச்னைகள் வளரத் தொடங்கின. திமுகவில் வி.கே.குருசாமியின் வளர்ச்சி எவ்வாறு திகழ்கிறதோ அதற்கு இணையாக அதிமுகவில் ராஜபாண்டியின் வளர்ச்சியும் திகழ்கிறது.

இந்நிலையில் ராஜபாண்டியின் அண்ணன் மகனான சின்ன முனீஸ் என்பவர் வி.கே.குருசாமியின் ஆட்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். ராஜபாண்டிக்கு மிக விசுவாசமான சின்ன முனீஸ்-சை 'தூக்க' வி.கே.குருசாமியின் ஆட்கள் முடிவு செய்கின்றனர். கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தீபாவளிக்கு முதல்நாள் சின்ன முனீஸ், வி.கே.குருசாமியின் ஆட்களால் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை தொடர்பாக குருசாமி உட்பட ஆறு பேர் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த அரசியல் பகை ஒரு கட்டத்திற்குப் பிறகு 'கேங் வார்' என்ற அளவிற்கு மாறத் தொடங்கியது. இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமென்றால், இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும், அந்தந்த தரப்பின் உறவினர்களாகவோ அல்லது விசுவாசிகளாகவோதான் இருந்து வருகின்றனர். கொலை செய்வதற்காக உள்ள கூலிப்படையினர் இவர்கள் யாரும் கிடையாது. தனது அண்ணன் மகனான சின்ன முனீஸ் இறப்பு ராஜபாண்டியை பெரிதும் நிலைகுலையச் செய்துவிட்டது. இதனால் வி.கே.குருசாமி தரப்பை பலவீனப்படுத்த ராஜபாண்டி தகுந்த சந்தர்ப்பத்தை எதிர் நோக்கை காத்திருந்தார்.

இந்நிலையில் வி.கே.குருசாமி கடந்த 2006-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத் தலைவராக திமுகவால் அறிவிக்கப்படுகிறார். 2008-ஆம் ஆண்டு சின்ன முனீஸ் கொலைக்குப் பழியாக வழுக்க முனீஸ், ராஜபாண்டியின் ஆதரவாளரான சப்பாணி முருகனால் கொலை செய்யப்படுகிறார். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சின்ன முனீஸ்-ன் தம்பி காளி என்ற வெள்ளைக் காளி, அண்ணனைக் கொலை செய்தவர்களைப் பழி வாங்குவதற்காக ராஜபாண்டி வகையறாவோடு இணைகிறார். அந்த சமயமே வி.கே.குருசாமி ஆட்களான மாரிமுத்து, ராமமூர்த்தி என்ற இருவரை மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வைத்து வெள்ளைக்காளி கொலை செய்கிறார்.

இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கொலைகளால், தனது அரசியல் வாழ்க்கை வேறுவிதமாக திசை திரும்பிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும், தொடர்ந்து பழிக்குப் பழி கொலைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் வி.கே.குருசாமி, எதிர்த்தரப்பான ராஜபாண்டியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமரசம் காண விரும்புகிறார். அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், இதன் மூலம் ராஜபாண்டி சமாதானம் அடையவில்லை. மேலும் பகையை வளர்க்கவே எதிர்த்தரப்பு விரும்பியது.

இதற்கிடையே இரட்டைக் கொலை விவகாரத்தில் மதுரை மத்திய சிறையிலிருந்த வெள்ளைக்காளி, சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகிய இருவரை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். இவர்கள் சேர்ந்து பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்கின்றனர். வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த குருசாமி ஆதரவாளரும் சின்ன முனீஸ் கொலையாளிகளுள் ஒருவருமான கஜேந்திர பாண்டி என்ற பாம்பு பாண்டியை கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி வெங்காய மார்க்கெட்டில் அதிகாலை 5 மணிக்கு கொலை செய்கின்றனர்.

பாம்பு பாண்டி வி.கே.குருசாமியின் உடன் பிறந்த தங்கையின் கணவராவார். இந்த சம்பவம் வி.கே.குருசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் வெள்ளைக்காளியோடு மற்ற அனைவரும் கைதாகின்றனர். இந்நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பாம்பு பாண்டி கொலைக்குப் பழிக்குப் பழியாக குருசாமி தரப்பு சகுனி கார்த்திக்கின் தாய்மாமன் மயில் முருகனை, நடனா திரையரங்கு அருகே காலை நடைப்பயிற்சி செல்லும்போது கொலை செய்கின்றனர். இதற்கு பதிலடியாக காளி குரூப், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி, வி.கே.குருசாமியின் மகன் மணியின் நண்பர் ஆட்டோ ஓட்டுநர் குப்பு என்கிற முனுசாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்கின்றனர்.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த காளியின் ஆட்கள், கடந்த 2016-ஆம் ஆண்டு கமுதியிலிருந்து மதுரைக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்த வி.கே.குருசாமியின் மருமகனான காட்டு ராஜா என்பவரை, பேருந்தை நிறுத்தி படுகொலை செய்கிறார்கள். இந்தக் கொலை தொடர்பாக காளி, சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி, குட்டை பூமி அனைவரும் நீதிமன்றத்தில் சரணடைகிறார்கள்.

தனது குடும்பத்தார் ஒவ்வொருவராகக் கொல்லப்படுவதைக் கண்டு கடும் சீற்றடைந்த குருசாமி, ராஜபாண்டியின் மகன் தொப்புலி என்ற முனுசாமியை 2017-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி குருசாமி தரப்பினர் கொலை செய்தனர். இந்தக் கொலையில் குருசாமியின் மகன் வி.கே.ஜி.மணி முக்கியக் குற்றவாளியாவார். முனுசாமியைக் கொடூரமாகக் கொலை செய்தது மட்டுமன்றி, கமுதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அவரது உடலை எரித்து சாம்பலாக்கிய சம்பவம் ராஜபாண்டி தரப்பை கடும் கொதிப்புக்கு ஆளாக்கியது.

2017-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி குருசாமி ஆதரவாளரான சடையாண்டி என்பவரை அரசு மருத்துவமனையில் வைத்தே காளி தனது நண்பர்களோடு கொலை செய்கிறார். இந்த சமயத்தில் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டியின் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால், காவல் துறையின் பார்வை இவர்களின் மீது விழுகிறது. காவல் துறையிடமே தங்களது கைவண்ணத்தை இருவரும் காட்டத் தொடங்குகின்றனர். 2018-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இவர்களைக் கைது செய்வதற்காக போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரை சிக்கந்தர் சாவடியிலுள்ள ஒரு வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்றபோது, போலீசாரைத் தாக்க முயன்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் இருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த என்கவுண்டர் சம்பவம் வி.கே.குருசாமி சொல்லித்தான் காவல் துறையால் நடத்தப்பட்டது என்று ராஜபாண்டி தரப்பு நம்பியது. ஆனால், தங்களுக்கும் என்கவுண்டர் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குருசாமி தரப்பு மறுத்தபோதும் ராஜபாண்டி மிகுந்த வன்மத்துடன் அடுத்த சம்பவத்திற்காக வி.கே.குருசாமி தரப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே காளியும் அவரது நண்பர்களும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி அனுப்பானடி அருகேவுள்ள கீழ்மதுரை ரயில்வே நிலையம் அருகே குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டி என்று நினைத்து அமமுக வட்டச்செயலாளர் முனியசாமி என்பவரைக் கொலை செய்து விடுகின்றனர்.

பிறகு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் ஸ்லீப் வழங்குவதற்காக வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தபோது, காளியும் அவரது நண்பர்களும் எம்.எஸ்.பாண்டியனை ஓட ஓட விரட்டி கொலை செய்கிறார்கள். அதற்குப் பிறகு வி.கே.குருசாமி தரப்பினர், 2020-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி குல்லா என்ற முத்துப்பாண்டியை வெட்டிக் கொலை செய்கின்றனர். இதற்குப் பதிலடியாக அதே ஆண்டு ஜூலை 28ஆம் தேதி காளியின் பிறந்தநாள் அன்று குருசாமியின் தெரு பகுதியிலும் அவரது வீட்டின் முன்பாகவும் அத்துமீறி பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுத்தனர். காளியும், அவரது நண்பர்களும் ரவுடித்தனம் செய்ததாக காவல் துறையினர் காளியையும் அவரது நண்பர்களையும் கைது செய்தனர்.

அதன் பிறகு நவம்பர் 13-ஆம் தேதி, எம்.எஸ்.பாண்டி கொலையில் சாட்சியாகச் செயல்பட்ட சடையாண்டி மகன் முனியசாமி தனது நண்பரோடு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ராஜபாண்டியின் ஆதரவாளர் வகுத்தால மணி என்பவர் மிரட்டியுள்ளார். நவம்பர் 15-ஆம் தேதி வி.கே.குருசாமி தரப்பினர் வகுத்தால மணியை கொலை செய்ய முற்படுகின்றனர். அவர் தப்பியோடி விடுகிறார். அப்போது அவரோடு உடனிருந்த முருகானந்தம் என்பவரை கொலை செய்து தலையை அறுத்து விடுகின்றனர். இந்த முருகானந்தம் என்பவர் காவல் துறை பணிக்கான தேர்வுக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த அப்பாவி இளைஞராவார்.

மாறி மாறி நடைபெற்ற இந்த கொலைச் சம்பவங்கள் மதுரை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், வி.கே.குருசாமி, இந்த சம்பவங்களால் தனது குடும்பத்தினரை விட்டு ஒதுங்கி பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்குள்ள உணவு விடுதியில் குருசாமி டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் குருசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

மதுரை மாநகரில் பகலென்றும் இரவென்றும் பாராமல் நிகழ்ந்த பழிக்குப் பழி கொலைச் சம்பவங்கள் காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெங்களூரு வரை நீண்டிருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. அரசியலில் சாதிக்க நினைத்து வந்த வி.கே.குருசாமியின் அரசியல் வாழ்க்கை திசை மாறி, தற்போது பெங்களூரு மருத்துவமனையில் நிலைகொண்டிருக்கிறது. அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் ஒருவரை, அவரது முந்தைய குற்றச் செயல்களே விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.

இதையும் படிங்க: பெங்களூரில் அரங்கேறிய மதுரை கேங் வார்.. முன்விரோதம் காரணமா.. போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.