ETV Bharat / state

ரேஷன் அரிசி கடத்தலுக்கு திமுக முக்கிய புள்ளிகள் உடந்தை - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

author img

By

Published : May 27, 2022, 6:28 AM IST

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் திமுக முக்கிய புள்ளிகளே உடந்தையாக உள்ளனர். அவர்கள் மூலம் அரிசி மூட்டைகள் கடத்தப்படுகின்றன என முன்னாள் அமைச்சர் செல்லூர் குற்றம்சாட்டியுள்ளார்.

செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை: மதுரை-தேனி அகல ரயில் பாதையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று(மே 26) முதல் பயணிகள் ரயில் சேவையை மதுரை ரயில் நிலையத்திலிருந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, திமுக ஆட்சியின்போது தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோரிக்கை வைக்கிறார்.

அதேபோன்று காங்கிரஸ் கூட்டணியில் திமுக மத்திய அமைச்சரவையில் பங்கேற்றபோது அக்கட்சி சார்பாக இணையமைச்சர் பொறுப்பு வகித்த காந்தி செல்வன்தான் நீட் தேர்வைக் கொண்டு வருவது குறித்து கையெழுத்திட்டார். இன்று நீட் தேர்வை நீக்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார். இவர்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வழக்காடினார்.

எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: இனி ஒருபோதும் இதிலிருந்து விலக்குப் பெற முடியாது என்று அவர் ஊடகங்களிடம் பேட்டியும் அளித்துள்ளார். ஆனாலும் திமுக நாடகமாடுகிறது. விளம்பரம் தேடுவதற்காக பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். வளர்ந்த மாநிலங்களிடமிருந்து அதிகளவில் வரியைப் பெற்று பின்தங்கிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் வளர்ந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு குறைவாக இருக்கும்.

இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல முறை மத்திய அரசை எதிர்த்திருக்கிறார். அதைத்தான் தற்போது ஸ்டாலின், பிரதமரிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். புதிதாக அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே உள்ளது. ஆனால், மதுரை மக்களுக்காக அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் முதலமைச்சர் எழுப்பவில்லை.

சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு : தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், திமுகவிலுள்ள முக்கியப் பிரமுகர்களின் நிழலாக ரவுடிகள் வலம் வருவது தான். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசிக் கடத்தல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி கடிதம் எழுதியுள்ளார்.

செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

இந்த அரிசிக்கடத்தலின் பின்னணியில் திமுக முக்கிய புள்ளிகளே உள்ளனர். இங்கிருந்து குறைந்த விலைக்கு லாரி லாரியாக கடத்திச் செல்லப்படும் அரிசி மூட்டைகள், ஆந்திர ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி புரிந்தபோது யாரேனும் கடிதம் எழுதியதுண்டா..? ஒரு படி அரிசி கூட இங்கிருந்து கடத்தப்படாத அளவிற்கு இரும்புக்கரம் கொண்டு கண்காணிக்கப்பட்டது.

இந்த அடிப்படையில்தான் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்கிறாரா முதலமைச்சர்..? தற்போதைய திமுக அரசும் முதலமைச்சரும்தான் தமிழகத்திற்கே மிகப் பெரிய பொழுதுபோக்காக உள்ளனர். மதுரைக்கு பொழுது போக்கு அம்சத்தின் அடிப்படையில் நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். தொடர்புடைய துறையின் அமைச்சர் இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொண்டார்" என்றார்.

இதையும் படிங்க: பிரதமருக்கு 5 கோரிக்கைகளை நேரடியாக விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.