ETV Bharat / state

மதுரை அருகே கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு!

author img

By

Published : Sep 23, 2020, 12:14 PM IST

Updated : Sep 24, 2020, 10:08 AM IST

மதுரை: தே. கல்லுப்பட்டி கண்மாய் மடையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Inscription
Inscription

மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர்களால் அந்தக் கல்வெட்டு படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

கல்லுப்பட்டி தேவன்குறிச்சி மலை வடகிழக்குப் பகுதியில் கண்மாய் உள்ளது, மலைச்சரிவுகளில் இயற்கையாகவே அமைந்த பாறைகளை வெட்டி இந்தக் கண்மாய் மடை அமைக்கப்பட்டுள்ளது.

கண்மாயிலிருந்து மடை மூலம் நீரை வெளியேற்றுவதற்காக மூன்று கண் மடைகள் அமைந்துள்ளன. இதில் முதல் கண்மடையின் தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும் 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் ஏழு வரிகள் கொண்ட கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன கல்வெட்டு அமைந்துள்ளது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு
கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு
கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு
கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

கண்மாய் மடையிலிருந்து நீர் செல்லும் பகுதியில் இக்கல்வெட்டு அமைந்திருப்பதால் இதில் உள்ள சொற்கள் பல அழிந்த நிலையில் உள்ளன.

இந்தக் கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ எனத்தொடங்கும் பாடல் வரிகள் போன்ற வடிவில் அமைந்துள்ளது. ‘கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

இதன்மூலம் இக்கண்மாய், மடை கலிங்கத்தரையரால் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கும் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த குறுநிலத் தலைவர்களைக் குறிப்பிடப்படுபவர்கள். இக்கண்மாய் உருவாக்கியவர்களின் சிறப்பை இக்கல்வெட்டு விவரிக்கிறது.

இதில் மன்னர் பெயர் அழிந்துள்ளது. கல்வெட்டில் கார்கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இம்மடையின் மேற்குப் பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

மடையை அமைத்துக் கொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன.

தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூர் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூர் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்படுகிறது.எனவே இக்கல்வெட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்
Last Updated :Sep 24, 2020, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.