ETV Bharat / state

கீழடியில் நடைபெற்ற 6வது கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு!

author img

By

Published : Oct 1, 2020, 6:22 PM IST

Updated : Oct 1, 2020, 7:17 PM IST

கீழடியில் நடைபெற்று வந்த ஆறாவது கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆவண பணிகளுக்காக மட்டும் சில நாட்கள் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஆறாவது கட்ட அகழாய்வில் 2 ஆயிரம் தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

6th-phase-excavation
6th-phase-excavation

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் மத்திய தொல்லியல் துறையின் சார்பாகவும், 4, 5, 6 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாகவும் நடைபெற்றன.

இந்திய தொல்லியல் துறையின் முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில், 7818 பொருட்களும், தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5820, ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900-ம் தொல்பொருட்களும் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

இந்தப் பணியில், கடந்த ஜூலை 31ம் தேதி வரை கீழடியில் 950, கொந்தகையில் 21, மணலூரில் 29, அகரத்தில் 786 என மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், மேற்கண்ட நான்கு இடங்கள் இதுவரை 128 கரிம படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் போன்ற விலைமதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவம் இடம் பெற்ற முத்திரைகள், மாடு இனத்தைச் சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில், 10 பளபளப்பான சிவப்பு நிற பானைகள், கருப்பு சிவப்புநிற பானைகள், ஏழு மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்பு தன்மையுடைய கல் மழு, 300 மில்லி கிராம் எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல் மணிகள், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் அகழாய் நடந்த இடம்

இந்த ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நேற்றுடன் (செப்.30) முடிவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆவண பணிகளுக்காக பணிகள் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன இக்காலகட்டத்தில் அகழாய்வுப் பணிகள் எதுவும் நடைபெறாது என தொல்லியல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் 24 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 59 குழிகளுக்கான கால் பகுதிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அகழாய்வு பணிகளுக்காக மொத்தம் 170 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க : போலி சான்றிதழ் பெற்று இயங்கும் பெட்ரோல், இயற்கை எரிவாயு விற்பனையகங்கள் - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Last Updated :Oct 1, 2020, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.