ETV Bharat / state

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கும்.. வைரமுத்து விவகாரத்தை பற்றி பேசுவோமா..? - மதுரையில் அண்ணாமலை சீற்றம்!

author img

By

Published : May 31, 2023, 4:44 PM IST

மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் மதுரை மண்ணிற்கு திமுக செய்த துரோகம் எனக் கூறியுள்ளார்.

BJP state president Annamalai said minister Palanivel Thiagarajan department change is DMK betrayal of Madurai soil
பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் மதுரை மண்ணிற்கு திமுக செய்த துரோகம் - அண்ணாமலை

ஜல்லிக்கட்டை போல செங்லோலையும் காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியுள்ளது: அண்ணாமலை

மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை அம்பிகா தியேட்டர் அருகே நடைபெறும் மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய எதுவுமே பொய்தான். CSK அணியை அனைவருக்கும் பிடிக்கும், அதில் டோனி இருப்பதால். CSK அணியில் தமிழர்கள் யாரும் விளையாட வில்லையன்றாலும் பிடிக்கும். ஆனால் குஜராத் அணியில் 3 தமிழர்கள் விளையாடினர்.

எந்த திராவிட மாடல் எந்த குஜராத் மாடலை வென்றது. தமிழர்களே இல்லாத ஒரு திராவிட மாடல், தமிழர்கள் இருக்கின்ற குஜராத் மாடலை வென்றது என திமுக பெருமை பீற்றிக் கொள்ளுமா.? ஜடேஜா மனைவி பாஜகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ. 2024 இல் தமிழ்நாட்டில் இதே நிலை தொடரும், பிஜேபி தான் தமிழ்நாட்டை ஜெயிக்க வைக்க போகிறது.

திமுகவினுடைய அமைச்சர் கூறியதற்கு எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன். திமுக அமைச்சர்கள் எந்த அளவு மூடர்களாக இருக்கிறார்கள். திராவிட மாடல் குஜராத் மாடலை வென்றது எனக் கூறியுள்ளனர். தமிழர்களே இல்லாத மாடல் திராவிட மாடல் என்றால், 3 தமிழர்கள் கொண்ட குஜராத் மாடலை என்னவென்று சொல்வது.

சிஎஸ்கே வென்று இருக்கிறது டோனிக்காக வென்றுள்ளது. ஐபிஎல் வென்ற கோப்பையை பெருமாள் சன்னதியில் வைத்து பூஜை செய்தனர். அனைவருக்கும் தெரியும் ஆண்டவன் அருளால் தான் தமிழகத்தில் எதுவும் நடக்கும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லக்கூடிய தமிழ் மண். எல்லா குற்றத்திற்கும் ஒரு ஆதாரம் வேண்டும், குற்றத்தை முறைப்படி விசாரிக்க வரைமுறை வேண்டும்.

பாலியல் புகாரில் 4 வீரர்கள், வீராங்கனைகள் இருக்கிறார்கள். அவர்கள் அளித்த புகார் இருக்கிறது. வழக்குப் பதியப்பட்டது, உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்திருக்கிறது விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்குள் கைது செய்தால் தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கவிப்பேரரசு வைரமுத்தின் மீது 19 வழக்குகள் உள்ளன. அவருக்கு வலது புறம் இடது புறம் இன்றைக்கு யார் உள்ளனர் மு.க.ஸ்டாலின் கூட உள்ளார். பாடகி புகார் அளித்தும் அவர் மீது வழக்கு எதுவும் பதியவில்லை. குற்றச்சாட்டிற்காக யாரையும் கைது செய்ய முடியாது. மல்யுத்த வீரர்கள் குற்றச்சாட்டிற்கு வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்தியாவில் அனைவரும் புகழ்பெற்றவர்கள் தான்" என்றார்.

வைரமுத்து விவகாரத்தை சீண்டிய அண்ணாமலை

தொடர்ந்து பேசிய அவர், "என்ன விஷயம் செய்தாலும் அந்த விஷயத்தை நாம் திரும்ப பெற முடியாது இந்த விஷயம் மல்யுத்தம் வீராங்கனைகளுக்கும் பொருந்தும். உச்ச நீதிமன்றத்தில் குறித்த கால அவகாசத்துடன் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம்முடைய வீராங்கனைகளுக்கு யாரின் மீது நம்பிக்கை வரும். இதே நியாயத்தை திமுகவை பார்த்தும் வைரமுத்துவை பார்த்தும் ஊடக நண்பர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வைரமுத்துவுக்கு ஒரு நியாயம்.? டெல்லியில் உள்ள வீராங்கனைகளுக்கு ஒரு நியாயமா.?

ஜூலை 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணம் ஆரம்பிக்க உள்ளோம் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முறைப்படி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி முதல் நாள் முதல் இறுதி நாள் வரை தெரியப்படுத்த உள்ளோம். எங்கெங்கு செல்ல உள்ளோம், ஆறு மாத காலம் நடை பயணம் குறித்தும் முழு விவரத்தையும் தெரியப்படுத்த உள்ளோம். இந்த நடை பயணத்தில் அனைத்து தேசிய தலைவர்களும் பங்கேற்பார்கள்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் என்பது மதுரை மண்ணிற்கு திமுக அரசு செய்த துரோகம். குற்றம் சுமத்துவது என்பது யார் வேண்டுமானாலும் சுமத்தலாம். பாஜக குற்றம் சுமத்தி ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளோம். பிடிஆர் பேசியது உறுதிப்படுத்தப்பட்ட ஆடியோ தான் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை, அவர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

திமுக அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும் அதற்கு பதிலாக அமைச்சர் பிடிஆர் இன் இலாகா மாற்றப்பட்டிருப்பது இந்த திராவிட மாடல் அரசில் யாருக்கும் எது வேண்டுமானாலும் மடக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாஜகவிற்கும் கருத்தியல் அடிப்படையில் வேறுபாடு இருக்கலாம்.

தமிழகத்தில் முதல்முறையாக வெட்கக்கேடான செயல் நடந்துள்ளது வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், அசால்ட் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் போடப்பட்டது அனைத்தும் திமுக கரூர் துணை மேயர், திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மக்கள் பிரஜைகளாக இருப்பவர்கள் அதிகாரிகளை தாக்குவதா? இது போன்ற ரவுடிகளை வேட்பாளராக அறிவித்து தேர்ந்தெடுத்தது தவறு. ரவுடிசம் செய்வதுதான் திமுகவின் திராவிட மாடல். வருமானவரித் துறை அதிகாரிகள் மீது கை வைப்பது திமுகவினுடைய மனநிலையை காட்டுகிறது. எந்தவித சட்ட திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு திரும்பி பார்க்கும் அளவிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மீதும் அதிகாரிகள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லும் அளவிற்கு காவல்துறையினர் செயல்படுகிறார்களா என்பது தான் எனது கேள்வி. உயர்கல்வித்துறை அமைச்சர் இன்றைக்கு தனக்கு தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார் என பேசி இருக்கிறார். அமைச்சர் பொன்முடியின் ஒவ்வொரு பேச்சும் கீழ்த்தரமாக உள்ளது.

மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து தேர்வு நடத்துகின்றன. வெளிநாட்டில் மருத்துவக் கல்லூரி படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் படிப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தாய் தந்தையருடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதன் மூலம் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டேவியாவிடம் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறோம்.

இது முள் மீது விழுந்த சேலை மாதிரி இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்து விட முடியாது. அவ்வளவு இடர்பாடுகள் இந்த பிரச்சனையில் உள்ளன. எந்த ஒரு முதல்வரும் வெளிநாடு பயணம் செல்வது வரவேற்க வேண்டியது தான். தமிழ்நாட்டைப் பற்றி அனைத்து மாநிலங்களும் வெளிநாடுகளும் தெரிந்து கொள்ளட்டும். முதல்வர் மட்டும் வெளிநாடு செல்லவில்லை அதிகாரிகளும் உடன் சென்றிருக்கிறார்கள்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு ஒரு ஆகச் சிறந்த பயணமாக மாற வேண்டும் என்பது எனது ஆசை. முதல்வர் தனியாக செல்லவில்லை பிராண்ட் தமிழ்நாடு, பிராண்ட் இந்தியா உள்ளது. பிராண்ட் இந்தியா அதிகமான முதலீடுகளை பெற்றுள்ளது. உலகத்தில் அதிகமான முதலீடுகள் கவரக்கூடிய நாடாக இந்தியா மாறி உள்ளது. இதற்கு முழுவதும் பிரதமர் மோடியே காரணம். இதை வைத்து நாம் முதலீடுகளை ஈர்க்கவில்லை என்றால் நாம் எந்த முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம்?

பிரதமர் மோடியை வைத்து முதலீடுகளை தமிழக முதல்வர் கவர வேண்டும். பாப்புவாநியூகுனியா முதல் அமெரிக்கா வரை ஒரே பிராண்ட் பிரதமர் மோடி. உபி அரசு இரண்டே ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக்கொண்டு சென்னையில் ஜனவரி மாதத்தில் சாலைக் காட்சிகள் நடத்தி தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.

ஆனால் நமது முதல்வர் ஜப்பான் சைனா சென்றிருக்கிறார் இதன் மூலம் இந்த பத்தாயிரம் கோடியை ஈடு செய்வாரா என்று பார்ப்போம். அப்படி ஈடுபடுத்தவில்லை என்றால் எதற்காக வெளிநாடு செல்ல வேண்டும்.? பொறுத்திருந்து பார்ப்போம் முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கப்பூர்வமானதாக கிடைக்கிறதா என்பதை.

ராகுல் காந்தி இன்றைக்கு காலை செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோல் அப்படி உள்ளது இப்படி உள்ளது என்று பேசியிருக்கிறார். காந்தி குடும்பத்திற்கு தொடர்ந்து செங்கோலை இழிவுபடுத்துவது என்பதை கடமையாக கருதுகிறார்கள். செங்கோலை நேரு அவர்கள் வாக்கிங் ஸ்டிக் என்று அனந்தபவனில் வைத்திருந்தார். அதே வம்சாவளியைச் சேர்ந்த ராகுல் காந்தி மறுபடியும் அமெரிக்க மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்தியுள்ளார். இதை ஒரு வேலையாகத்தான் ராகுல் காந்தி வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு விளையாட்டை காங்கிரசார் அவமானப்படுத்தினர். தற்போது செங்கோலை அவமானப்படுத்தியுள்ளனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது? உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் மேகதாது அணை விவகாரத்தை பார்த்துக் கொள்கிறோம். மேகதாது அணை உறுதியாக கட்டுவோம் என டி.கே.சிவக்குமார் கூறியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பாரா.?" என்றார்.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்: பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆவேச பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.