ETV Bharat / state

14 ஆண்டாக திறக்கப்படாத நியாயவிலைக் கடை: பொதுமக்கள் வேதனை

author img

By

Published : Oct 21, 2019, 11:24 PM IST

கிருஷ்ணகிரி: சமத்துவபுரத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடை 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கடை

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் சாலையில் அமைந்துள்ள மாநில அரசுக்குச் சொந்தமான நியாயவிலைக் கடை 14 ஆண்டாக திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து அந்த கிராமத்தின் பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவரிடம் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் பேசியபோது, "ஆந்திராவுக்குச் செல்லும் குப்பம் சாலையில் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் திமுக ஆட்சிக் காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு 2006ஆம் ஆண்டு எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இங்கு 100 வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறோம்.

இங்கு வசிக்கும் மக்களுக்காக, சம்பூர்ண கிராமீன் ரோஸ்கார் யோஜனா (எஸ்ஜிஆர்ஓய்) திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது. சம்பூர்ண கிராமீன் ரோஸ்கார் யோஜனா (எஸ்ஜிஆர்ஓய்) திட்டம் என்பது ஊரகப்பகுதி மக்களுக்காக 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேலை மற்றும் உணவு வழங்கும் திட்டமாகும்.

14 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

இதன்மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்கிற நம்பிக்கையில் 14 ஆண்டாக நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் அத்தியாவசிய ரேஷன் பொருள்கள் வாங்க சுமார் மூன்று கிமீ தொலைவில் உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்துக்கு நடந்தே சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. மண்ணெண்ணெயை அரசு குறைவாகவே கொடுப்பதால் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்க ஆட்டோவுக்கு ரூ.20 செலவிட வேண்டியுள்ளது. இதனால் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகிறது" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘நியாயவிலைக் கடை கட்டடம் பயன்பாட்டிற்கே வராமல், முற்றிலும் சேதமடைந்துவருகிறது. அருகிலிருக்கும் நியாயவிலைக் கடையில் எங்களுக்குப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், அரிசி வாங்கிக் கொண்டு நடந்தே வர வேண்டிய நிலைதான் உள்ளது. எனவே சமத்துவபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையை அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இக்கிராமத்தின் அருகில் உள்ள அருந்ததியர் காலனியில் 150 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். அவர்களும் வேறு ஒரு கிராமத்திற்கு சென்றுவரும் இதே நிலைதான் உள்ளது.

இது தொடர்பாக வட்டார வழங்கல் அலுவலரிடம் நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, சரியாக பதிலளிக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

14 ஆண்டாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத நியாயவிலைக் கடையால் பொதுமக்கள் அன்றாட அலுவல் வேலைகள் முதல் குடும்ப வேலைகள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தியாவசியப் பொருள்களைக் கொடுக்க வேண்டிய நியாயவிலைக் கடை கட்டுப்பட்டு 14 ஆண்டாக சீரழிந்துவருவதால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் அயோத்தியா பிரச்னையை கையிலெடுக்கும் சிவ சேனா!

Intro:14 ஆண்டுகளாகத் திறக்கப்படாத ரேஷன் கடைBody:14 ஆண்டுகளாகத் திறக்கப்படாத ரேஷன் கடைConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.