ETV Bharat / state

"ஆபிஸ் பக்கம் போகவே பயமா இருக்கு" அலறும் வார்டு உறுப்பினர்கள்.. கரூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Mar 14, 2023, 1:06 PM IST

Updated : Mar 16, 2023, 6:33 AM IST

திம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாதாந்திர கூட்டத்தை கடந்த 6 மாதமாக நடத்தாததால், மக்கள் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Thimmampatti Panchayat Council
திம்மம்பட்டி ஊராட்சி

திம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் கூறிய வார்டு உறுப்பினர்கள்

கரூர்: குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மம்பட்டி ஊராட்சியில், மன்ற தலைவராக இருப்பவர் செல்வி முருகன். இவர் கடந்த மூன்றை ஆண்டு காலமாக ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் நேரடியாகத் செல்வியின் கணவரை நிர்வாகம் செய்ய ஈடுபடுத்துவதால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியிலிருந்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கரூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியரிடமும் 4 முறை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை உரிமையில் பேசி திட்டுவதாகவும், அவர்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தி மிரட்டல் விடுப்பதாகவும் மார்ச் 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "திம்மம்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை முறையாக நடத்தக் கோரியும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தி மக்கள் பிரச்னையை தீர்மானமாக நிறைவேற்றக் கோரியும், கரூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்" என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திம்மம்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ராஜகோபால் கூறுகையில், "ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தார் தலையிட்டால் ஊராட்சி மன்ற நிர்வாகம் முறையாகச் செயல்படுவதில்லை. ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நடத்த வேண்டிய கூட்டத்தையும், கடந்த 6 மாதமாக நடத்தாமல் ஊராட்சியில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் வழங்கக் கோரியும் உள்ள கோரிக்கை தீர்மானங்களாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாகக் கூறினார். மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார்களை அளித்து மிரட்டப்பட்டு வருவதாகவும், இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் செல்வதற்குப் பயமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திம்மம்பட்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் அன்னக்கிளி, "ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வீடு அருகே வசித்து வருவதால், தனக்கு பல்வேறு இடையூறுகளை ஊராட்சி மன்ற தலைவரும், அவரது குடும்பத்தாரும் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு மின்சார இணைப்பை திடீரென துண்டித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்வதற்கு அச்சமாக இருப்பதாகவும்" தெரிவித்தார்.

திம்மம்பட்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பெரியக்காள் கூறுகையில், "தனது வார்டு இந்திரா காலனி பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வைத்து நிறைவேற்றித் தர முடியாத சூழ்நிலை உள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தான், ஆனால் இவ்வாறு செயல்படாத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் முறையான விசாரணை நடத்தி செயல்படாத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வில் திம்மம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, கிருத்திகா, தீபா, வடிவேல், பொன்னுச்சாமி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஓட்டப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த நாய்கள்!

Last Updated :Mar 16, 2023, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.