ETV Bharat / state

Karur IT Raid: கரூரில் 4வது நாளாக ஐடி ரெய்டு; அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இதுவரை 15 பேர் கைது!

author img

By

Published : May 29, 2023, 7:45 PM IST

கரூரில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பான வழக்கில், இதுவரை திமுகவைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

followup
கரூர்

கரூர்: கரூரில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த 25ஆம் தேதி காலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது, திமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுகவினர் பெண் வருமான வரித்துறை அதிகாரியிடம் இருந்த ஆவணங்கள் மற்றும் கைப்பையை பிடுங்கி, 'பெயர் என்ன, ஐடி கார்டை கொடு' என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். பெண் அதிகாரி உள்பட சில அதிகாரிகள் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றனர். இந்த அதிகாரிகள் இன்று(மே.29) சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கரூரில் ஐடி அதிகாரிகளை தடுத்த திமுகவினர்.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நூதன விளக்கம்!

இதனிடையே நேற்று காலை முதல் கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் திமுக நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்ததாக கரூர் மாநகராட்சி மேயர் கவிதாவின் உறவினரான கரூர் வடக்கு மாநகர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பூபேஷ், திமுக நிர்வாகிகள் அருண், ஐடி விங்க் ஷாஜகான், சிவப்பிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் புல்லட் பூபதி, லாரன்ஸ், திமுக மாவட்ட கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர் ஜோதிபாசு, கரூர் மத்திய கிழக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் ஜிம் பாலாஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் ராயனூரில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை இட சென்றபோது, மாட்டு வண்டிகளை நிறுத்தி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழ்ச்செல்வன், ரஜினி, சிவா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அதேபோல், கணேஷ் முருகன் டிரான்ஸ்போர்ட்டில் போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் அதிகாரிகளை மிரட்டியதாக அதன் உரிமையாளர் குணசேகரன், ஊழியர்கள் தங்கவேல், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Karur IT Raid: 3வது நாளாக சோதனை.. 8 திமுகவினர் கைது.. கரூரில் நடப்பது என்ன?

இந்த சூழலில், நான்காவது நாளாக இன்று கரூர் வடக்கு காந்திகிராமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. காந்திகிராமம் ஈ.பி காலனியில் அமைந்துள்ள பிரேம்குமார் சோபனா என்பவரது வீட்டில் வருமானவரி துறை சோதனை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் சோபனா கணக்காளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த்தின் அலுவலகம் மற்றும் தான்தோன்றிமலை சுரேந்திர மெஸ் ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். மேலும், கரூர் மாநகராட்சி மேயர் தாரணி சரவணன் வீடு, கரூர் வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் ஒருவரின் அலுவலகம், சோடா கம்பெனி என சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக பதியப்பட்டுள்ள வழக்கில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள், திமுக பெண் நிர்வாகிகள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஐடி அதிகாரிகளின் விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தடுத்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கொடைக்கானல், ஊட்டி போன்ற நகரங்களுக்கு சுற்றுலாவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் வீடு திரும்பியதும் மீண்டும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வீடு மற்றும் அலுவலகங்களின் கதவுகளை உடைத்தும் சோதனையிட அதிகாரிகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: "அதிகாரிகள் தாக்கிய ஆதாரத்தை காட்டுங்க" - திமுகவினரை விளாசிய ஐ.டி. இயக்குனர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.