ETV Bharat / state

Kanyakumari: காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை; கன்னியாகுமரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

author img

By

Published : Jun 14, 2023, 10:27 PM IST

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பாலியல் வன்கொடுமை மற்றும் பணம் கேட்டு மிரட்டல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கன்னியாகுமரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kanyakumari Kasi
கன்னியாகுமரி காசி

கன்னியாகுமரி: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன் இவரது மகன் காசி என்ற சுஜி (26). இவர் இன்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்துள்ளார். பெண்கள் பலரை தன் வசீகரமான தோற்றத்தால் கவர்ந்த காசி, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகியுள்ளார்.

மேலும் இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல்வேறு இளம் பெண்களிடம் நெருங்கிப் பழகி அவர்களுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஆன்லைன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் செய்திருந்தார். இதே போன்று நாகர்கோவில் பகுதிகளிலும் பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காசியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான இளம் பெண்களை, முக்கிய பிரமுகர்களின் மனைவி, கல்லூரி மாணவிகள் இவரது வலையில் சிக்கி உள்ளது அம்பலமானது.

இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போஸ்கோ வழக்கு, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், வடசேரி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கள் என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் காசி மீது போஸ்கோ, கந்து வட்டி, பாலியல் துன்புறுத்தல், என பல வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தது, காசியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடசேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கந்து வட்டி வழக்கும் மற்ற காவல் நிலையங்களில் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டும் வழக்கும் பதிவாகியுள்ளது. காசி விவகாரம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில், 120 பெண்களுடைய 400 வீடியோக்கள் மற்றும் 1,900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்த விவகாரத்தில் அவருடைய தந்தை தங்க பாண்டியனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா, இளம் பெண் புகார் குறித்த விசாரணையை நடத்தி வந்தார். அதில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் காசி மற்றும் அவர் தந்தை தங்க பாண்டியன் ஆகிய இருவரும் நாகர்கோவிலில் இளம் பெண் கொடுத்து இருந்த பாலியல் புகார் குறித்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா 10 க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நேரில் வாக்குமூலம் வாங்கினார். புகார் கொடுத்த இளம் பெண்ணும் சாட்சியளித்தார். மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி கைது!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.