ETV Bharat / state

88 ஏக்கர் நெற்பயிர் பாசனத்திற்கு இயந்திரங்களை தலைச்சுமடாகவே கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை!

author img

By

Published : Jul 13, 2023, 5:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 88 ஏக்கர் நெற்பயிர் பாசன நிலங்களுக்கு செல்ல பாதை இல்லாததால் விவசாய இயந்திரங்கள் கொண்டு செல்ல முடியாமல் அனைத்தும் தலைச்சுமடாகவே கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

farmers carry machines headlong
88 ஏக்கர் நெற்பயிர் பாசனம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலுக்கு பின்னர் இதுவரை ஒரு சிறு இயந்திரங்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது. உரங்கள், நாற்றுகள், விதைகள், பூச்சி மருந்து தெளிப்பான்கள், போன்ற அனைத்தும் தலைச்சுமடாக கொண்டு சென்று விவசாயம் நடைபெறும் பகுதியாக உள்ள 88 ஏக்கர் பாசன நிலங்கள் அடங்கிய ஒரு பகுதி நாகர்கோவில் அருகே மயிலாடி பாசன பிரிவின் கீழ் உள்ள ரவிபுதூர் வருவாய் கிராமத்தில் பாப்பான் புரவில் உள்ளது.

88 ஏக்கர் நெற்பயிர் பாசனத்திற்கு இயந்திரங்களை தலைச்சுமடாகவே கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை

இந்த பாசன நிலங்களுக்கு மாடுகள் மற்றும் டிராக்டர்கள் கொண்டு செல்ல ஒரு பாலம் இருந்தது. தற்போது அந்தப் பாலம் ஒக்கி புயல் மற்றும் பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அந்த பாலம், இதுவரை சீர் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் அறுவடை காலங்களில், வேலை ஆட்களை வைத்து தான் வயல் அறுவடை செய்ய வேண்டும். அதே போன்று தலைச்சுமடு மூலமாக நெல்லினை வீடுகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க சுமார் 3 மணிநேரம் நடந்து தான் சாலையில் இருக்கும் வாகனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், மழை காலங்கள் என்றால் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு செல்லும் முன்னர் முளைத்து விடும். இப்படி எண்ணற்ற பிரச்னைகளால் விவசாயிகள் பெரும் துயரம் அடைந்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயல் காரணமாக, இந்த பாசன பகுதிகளுக்கு செல்லும் பாலம் சேதமடைந்த பின்னர், இதுவரை அந்த பகுதியில் வேறு பாலம் கட்டப்படவில்லை.

தற்போது கூட அந்த பகுதிக்கு வயல் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட விவசாயிகள் ஒற்றையடி பாதை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. சில வேலைகளில் அந்தப் பகுதி வழியாக செல்பவர்கள் கீழே விழுந்து கை கால் முறிவு ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெறுகின்றது. மேலும், விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் பாலங்கள் அல்லது அழிந்த பாதைகளை சீர் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பாப்பனான் குளம் புரவு விவசாயிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் தேசிகர் என்பவர் கூறும்போது, பாப்பனான் குளம் புரவு என்பது நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகும். இந்த சுற்று வட்டார பகுதியில் பிழைப்புக்கு வேறு எந்த விதமான தொழில்களோ அல்லது வளங்களோ இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்த மக்களின் மிக முக்கிய பிரச்னையாக பாலம் பிரச்னை உள்ளது. அதை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதே பகுதியில் நெல் விவசாயம் செய்துவரும் அருள் சுந்தரம் என்பவர் கூறும்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன நிலங்களுக்கு பாதை இல்லாத ஒரே புரவு அதுவும் 88 ஏக்கர் நெல் வயல்கள் கொண்ட புரவு இது ஒன்றாக தான் இருக்கும். பாலம் சேதமடைந்து ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் அது சரி செய்யப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து வேதனையை அனுபவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம் இந்த புரவுக்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க:Delhi Flood: அபாய கட்டத்தை கடந்த யமுனை - டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.