கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குனர் டங்ஸ்டன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 21ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் இணையம் புத்தன் துறையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல ஆயிரக்கணக்கான கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் மீனவர்களின் முக்கிய கோரிக்கையான மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது. இதே போன்று, ஆழ்கடலில் விசைப் படகுகளில் கப்பல் மோதி விபத்துகள் ஏற்படுத்திச் செல்லும்போது நடவடிக்கை எடுக்க அரசு முன் வர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மாநாடு மூலமாக வலியுறுத்தப்பட உள்ளது.
மேலும், ஆழ்கடலில் மீனவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு உயிருக்குப் போராடும்போது அவர்களைக் காப்பாற்ற, அண்டை மாநிலமான கேரளாவில் அரசு செய்து உள்ள நடவடிக்கைகள்போல, தமிழக அரசும் நவீனப்படுத்தப்பட்ட கடல் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வர தமிழக முதலமைச்சரிடமும், மீன்வளத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு கொடுத்தும் இன்னமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆகவே, மாநாட்டில் இந்த கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த உள்ளோம்.
இது மட்டுமல்லாது, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு என தனித்தனியாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் நடைபெறுகிறது.
மேலும், சமூக சிந்தனை குறித்த விழிப்புணர்வு குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் பெண்களுக்கான கடல் மீன் சமையல் போட்டியும், தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் வைத்து நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போய் பொழப்ப பாருங்க.. த்ரிஷாட்ட தப்பான வீடியோவை காமிச்சிருக்காங்க - த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் பதில்!