ETV Bharat / state

முந்திரி தருவதாக கூறி 64.74 லட்சம் ரூபாய் மோசடி; சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 4:32 PM IST

நாகர்கோவில் அருகே குறைந்த விலையில் முந்திரி தருவதாக கூறி ரூ.64.74 லட்சம் மோசடி செய்தவரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

cheating Rs 64 lakh by claiming to give cashew one person arrested at Chennai airport
cheating Rs 64 lakh by claiming to give cashew one person arrested at Chennai airport

கன்னியாகுமரி: திக்கணங்கோட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அந்த மனுவில் கன்னியாகுமரி சர்ச் ரோட்டை சேர்ந்த அகஸ்டின் ராய் என்பவருக்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவர் முந்திரி வியாபாரம் செய்து வருவதாக என்னிடம் கூறினார். மேலும் முந்திரி வியாபாரம் செய்ய பணம் கொடுத்தால் தேவையான முந்திரியை குறைந்த விலைக்கு எனக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

இதை நம்பி பல தவணையாக 64.74 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் நான் கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிய அவர் எனக்கு முந்திரி அனுப்பி வைக்கவில்லை, பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டார். எனவே அவரை கைது செய்து என்னிடம் இருந்து வாங்கிய பணத்தை வாங்கி தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட குற்ற பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அகஸ்டின் ராயை தேடி வந்தனர். ஆனால் அவர் வெளி நாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் கைது செய்வதற்காக அகஸ்டின் ராய் தொடர்பான விவரங்களையும் அவரது புகைப்படத்தையும் சென்னை, மதுரை, திருவனந்தபுரம், திருச்சி உட்பட பல்வேறு விமான நிலையங்களில் அங்கு உள்ள போலீஸிடம் கொடுத்து உஷார்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அகஸ்டின் ராய் வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய போது அகஸ்டின் ராய் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக குமரி குற்ற பிாிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக சென்னைக்கு சென்று அகஸ்டின் ராயை அதிரடியாக கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்துள்ளனர். குறைந்த விலைக்கு முந்திரி தருவதாக கூறி ரூ.64.47 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த அகஸ்டின் ராயிடம் தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கண் அசந்த நேரத்தில் செல்போன் திருட்டு : மர்ம நபர் கைவரிசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.