ETV Bharat / state

குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி பரிவேட்டை

author img

By

Published : Oct 27, 2020, 8:41 AM IST

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நடைபெற்றது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா, கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் கோயில் வளாகத்தில் வாகன பவனிகள் நடைபெற்றன. விழாவின் 10ஆம் நாளான நேற்று (அக்.26) பாரம்பரிய முறையில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்து பின் பரிவேட்டைக்குப் புறப்பட்டார். அப்போது கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் கோயிலில் இருந்து நான்கு ரத வீதிகள் வழியாக விவேகானந்தபுரம், ஒற்றைப்புளி, பழத்தோட்டம், மகாதானபுரம் ரவுண்டானா வழியாக பரிவேட்டை மண்டபம் வந்தடைந்தது.

பகவதி அம்மன் கோயில் பரிவேட்டை நிகழ்ச்சி

வாகனம் வரும் வழியில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர். மாலையில் பரிவேட்டை மண்டபத்தை வந்தடைந்தவுடன் மூன்று முறை வலம் வந்து பாணாசுரனுடன் கடும் சண்டையிட்டு, தென்னம்கருக்கில் பாணாசுரன் இருப்பதாகக் கருதி அதன் மீது அம்பு ஏய்தி பானாசுரனை வதம் செய்தார்.

வழக்கமாக அம்மன் வேட்டைக்குப் புறப்படும்போது, யானை, குதிரை, முத்து குடை அணிவகுப்பு, தப்பாட்டம், தேவராட்டம், செண்டை மேளம், பஜனை போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டு கரோனா பரவல் காரணமாக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

கலை நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அம்மன் வாகனம் மட்டும் பரிவேட்டை நிகழ்வில் பங்கேற்று எளிமையான முறையில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க:சேதுபதி மன்னர்கள் அரண்மனையில் பொதுமக்கள் இன்றி அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.