ETV Bharat / state

எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

author img

By

Published : Jun 24, 2023, 4:20 PM IST

Updated : Jun 25, 2023, 10:50 AM IST

குற்றியாறு அணைப்பகுதியில் மெலிந்த தோற்றத்துடன் சுற்றித் திரியும் அரிசிக் கொம்பன் யானையின் மெலிந்த தோற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் யானைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

கன்னியாகுமரி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சின்னகானல், வட்டகானல் வனப்பகுதியில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8 பேர் இந்த யானை தாக்கி இறந்துள்ளனர். ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால், இந்த யானையை கேரளாவில் அரிக் கொம்பன் என்றும், தமிழ்நாட்டில் அரிசி கொம்பன் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய அரிசி கொம்பன் யானை தமிழக - கேரள எல்லை பகுதியான பெரியார் புலிகள் காப்பகம் முல்லைக் கொடி பகுதியில் கொண்டு விடப்பட்டது. அரிசி கொம்பன் அங்கிருந்து காடுகள் வழியாக சுற்றித் திரிந்து, கம்பம் நகருக்குள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டது.

ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின்னர் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர் அரிசி கொம்பன் யானை குமரி- நெல்லை எல்லையில் உள்ள அப்பர் கோதையாரின் அருகே உள்ள முத்துக்குழி வயல் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விடப்பட்டது.

வனப்பகுதியில் உள்ள யானையின் கழுத்தில் ரேடியோ காலர் என்னும் எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டதால் காடுகளில் யானையின் இருப்பிடம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது யானை கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு மேலே உள்ள குற்றியாறு அணைப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. இந்த வனப்பகுதியை பொறுத்தவரை தாராளமாக தண்ணீர் வசதியும், உணவும் கிடைப்பதோடு இங்குள்ள வன சூழ்நிலை அரிசி கொம்பன் யானை கடந்த 15 நாட்களாக சுமார் 6 கி.மீ., சுற்றளவில் மட்டுமே சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றி திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது சமூக ஆர்வலர்கள், யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள், ”அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.

அப்பர் கோதை ஆறு பகுதியில் யானைக்குத் தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைத்து வருகின்றன. தினமும் யானையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், தினமும் யானை சாப்பிடும் உணவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானையின் சாணத்தை எடுத்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

யானை ஏற்கனவே இருந்த சீதோஷண நிலையில் இருந்து தற்போது புதிய சீதோஷண நிலைக்கு வந்துள்ளதால் அதன் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அதனை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 14 நாட்களாக 5 கி.மீ., முதல் 7 கி.மீ., சுற்றளவில் தான் யானைச் சுற்றி வருகிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் என மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போது கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகேவுள்ள வனப்பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

@@@

அரிக்கொம்பன் யானையின் தற்போதைய உடல்நிலை எப்படி உள்ளது? சூழலில் ஆர்வலர்கள் கூறும் தகவல்

அரிக் கொம்பன் யானையின் உடல் மெலிந்ததற்கு காரணம் என்ன?: இந்த நிலையில், இதுகுறித்து சூழலியல் ஆர்வலரும் கோயம்புத்தூர் வன உயிரினப் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவருமான முருகானந்தம் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'யானைகள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யும்போது அதன் உடல் எடை குறையத்தான் செய்யும். உதாரணத்திற்கு, கோவையில் விவசாயப் பயிர்களை மட்டுமே சாப்பிட்டு வந்த சின்னத்தம்பி, விநாயகர் ஆகிய இரு யானைகள் பிடிக்கப்பட்டபோது சுமார் 5 டன் 500 கிலோ இருந்ததாகவும், பின்னர் அந்த யானைகளை இடமாற்றம் செய்தபோது உடல் மெலிந்து காணப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.

மேலும், இதற்குக் காரணம் இங்கு நல்ல ஊட்டச்சத்து உள்ள கரும்பு, வாழை, தென்னை ஆகியவற்றை சாப்பிட்டதால் அதன் எடைக் கூடியிருந்ததாகவும் ஆனால், அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கிடைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட்டதால் அவை மெலிந்து காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், இது தற்காலிகமானது தான் என்றும் அதனை ஒரு மாத காலம் கண்காணித்து வந்தால், உடல் நிலையில் மாற்றம் தெரியவரும் என்றார். அதுபோல் தான், அரிக் கொம்பன் விவசாய பயிர்களை சாப்பிட்டு இருந்தபோது, நல்ல உடல்வாகுடன் இருந்ததாகவும், தற்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதால் அங்கு கிடைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் உடல் மெலிந்து காணப்படுதாகவும் விளக்கினார். வனப்பகுதியில் உள்ள இந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு பிறகே அதன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Manakudy: மணக்குடி காயலில் படகு சவாரி திட்டம்.. அமைச்சர் மனோதங்கராஜ் பயணம் செய்து ஆய்வு!

Last Updated : Jun 25, 2023, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.