ETV Bharat / state

உங்களின் விஸ்வரூபம்தான் நான், இனி என் பெயர் மக்கள் - கமல்

author img

By

Published : Dec 21, 2020, 6:46 AM IST

நம்பிக்கை குரல் எழுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கான வளர்ச்சி நம்மை எதிரிகளாக நினைக்கும் கண்களில் மிகவும் உறுத்துகிறது. உங்களின் விஸ்வரூபம்தான் நான், இனி எனக்கென்று தனி பெயர் இல்லை; இனி என் பெயர் மக்கள் என தொண்டர்கள் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

kamal hassan election campaign speech in kanchipuram
kamal hassan election campaign speech in kanchipuram

காஞ்சிபுரம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையின் ஓர் பகுதியாக காஞ்சிபுரத்திற்கு வருகைபுரிந்தார்.

மேலும் பரப்புரையின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வந்த கமல்ஹாசன் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றி கமல்ஹாசன் பேசினார்.

அப்போது, “நாம் அவர்களை எதிரியாகப் பார்க்கிறோமா என்றால் இல்லை. ஏனென்றால் அவர்கள் குற்றவாளிகள். அனைவருக்கும் எதிரிகளாக நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாடும், அவர்களை அப்படித்தான் பார்க்கப் போகிறது. இது சாபம் அல்ல, எங்கள் ஆசை. உங்களுடைய ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.

கருவிலேயே கலைத்துவிடுவோம். ஆரோக்கியமான பிள்ளைகளாக இருக்காது என்றெல்லாம் சொல்லி எங்களிடம் பயம் ஏற்படுத்த பார்த்தார்கள். ஆனால் இன்று பயப்படுவது அவர்கள். உங்களின் விஸ்வரூபம்தான் நான். இனி எனக்கென்று தனிப்பெயர் இல்லை, நீங்கள் என்றைக்கு என்னை நம்மவர் என்று சொன்னீர்களோ அன்றிலிருந்து நான் நீங்களாக ஆகிவிட்டேன். இனி என் பெயர் மக்கள்.

தமிழ்நாடு மக்கள் என்று சொன்னால், அது என்னைக் கூறுவதுபோல் உள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது வைக்கின்ற விமர்சனம் என்மீது வைப்பதாக நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு தமிழன் செய்கின்ற சாதனைகள் எனது சாதனையாக நான் நினைக்கிறேன்.

பணம் வேண்டாம்; நல்லாட்சிதான் வேண்டும்

பிக் பாஸ் நடித்தால் என்ன தப்பு, அனைவரையும் மகிழ்விக்கிறேன். அதில் சொல்லும் நல்ல கருத்துகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. 30 ஆண்டுகளாக ஏழ்மைகளைக் காப்பாற்றிவைத்துள்ளார்கள். ஏனென்றால் தேர்தல் வரும்பொழுது அது தேவைப்படும். பணத்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். நல்லாட்சி வேண்டும் என மக்கள் சொல்லிவிட்டால் எப்படி அவர்களை மிரட்டுவது.

ஐந்தாயிரம் கொடுப்பதை வாங்காதே என்று நான் சொல்லுகிறேன். நீங்களும் கொடுக்க மாட்டீர்கள், கொடுப்பவர்களையும் விட மாட்டீர்களே என என் மீது மக்கள் கோபப்படுகிறார்கள். அது அவங்க கொடுக்கின்ற தர்மம் அல்ல, அவர்கள் கொடுப்பது உங்கள் பணம் தான்.

உங்களிடத்தில் தேர்தல் சமயத்தில் செய்யும் முதலீடுகள்

அதையும் கம்மியாக வாங்கிக் கொள்கிறீர்கள். திருப்பி அவர்கள் எடுப்பது 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் கொடுப்பது ஒரு விழுக்காடு கூட கிடையாது. உங்களுக்குச் சேர வேண்டியதை கொண்டுச்சேர்க்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம்.

வாழ்க்கை முழுவதும் சாப்பாடு வேண்டுமென்றால், தேவைப்படுவது வேலைவாய்ப்பு. அதைக் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம். வேலைதேடும் தொழிலாளர்களாக இல்லாமல், வேலை தரும் முதலாளிகளாக மாற்ற முடியும் அதைச் செய்வோம்.

எல்லாம் செய்ய முடியும் இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஓட்டு போடுங்கள் என்று நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை. நீங்கள் வெளியே சென்று எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் எனச் சொல்ல வேண்டும்.

எதிரிகள் புரண்டு புரண்டு தூங்கும் பொழுது, நாம் திரண்டு திரண்டு வேலைசெய்ய வேண்டும். வெற்றியை நோக்கிய நமது பயணம் தொடங்கிவிட்டது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.