ETV Bharat / state

திருக்கோயிலுக்குச் சொந்தமான 50,001 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடக்கம்!

author img

By

Published : Jun 1, 2022, 10:56 PM IST

’தமிழ்நாட்டில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் 50ஆயிரத்து 1 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி இன்றைக்கு தொடங்கி இருக்கிறது. இதுவும் முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில், ஆன்மிகத்தில் ஒரு புரட்சி’ என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு
செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு

காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி முதற்கட்டமாக 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா திருப்புலிவனம் கிராமத்திலுள்ள ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி இன்று (ஜூன் 01) முதல் தொடங்கப்படுகிறது.

கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணியை தொடங்கிவைக்க ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

பின்னர் 50ஆயிரத்து 1 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணியை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருக்கோயில்களின் சொத்துக்களை இணையதளத்தில் வெளியிடுகின்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வகையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களை DGPS ரோவர் கருவிகள் மூலம் நில அளவை செய்து அந்த திருக்கோயிலுக்கு உண்டான நிலங்களை முழுமையாக பாதுகாத்திட வேண்டி தற்போது திருப்புலிவனம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான 9.72 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஜூன் ) தொடங்கப்பட்டன.

அளவீடு செய்யப்படும் இந்த 9.72 ஏக்கர் நிலங்களையும் சேர்த்து 50ஆயிரத்து 1 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி இன்றைக்கு நிறைவுற்று இருக்கிறது. இதுவும் முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில், ஆன்மிகத்தில் ஒரு புரட்சி என்று எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பணி மேலும் தொடர இருக்கிறது. இந்த நில அளவீடு பணியில் ஏற்கெனவே 150 நில அளவர்கள் நியமனம் செய்து 20 மண்டலங்களில் 50 குழுக்களாகப் பிரித்து நில அளவீடு பணி நடந்துகொண்டிருக்கிறது.

இதனை மேலும் விரிவுபடுத்துகின்ற வகையில் மேலும் 66 நில அளவர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை 100 குழுக்களாக விரிவுபடுத்தி மூன்று மாதங்களுக்குள் ஒரு லட்சம் அளவிற்கு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை நிறைவு செய்ய இருக்கின்றோம். இப்பணிகளால் கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், கோயில் நிலங்களுக்குரிய வரைபடத்தையும் ரோவர் கருவியின் மூலம் தயாரிப்போம்” எனத்தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் பாபு

தொடர்ந்து பேசிய அவர், “கச்சத்தீவு மீட்பு குறித்து அவரவர் உரிமையைக் கூறுவதில் கருத்து கூற விரும்பவில்லை. முதலமைச்சர் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்பது, மீனவர்களுக்கு உண்டான போதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருவது, மீனவர்களின் ஜீவாதார உரிமை பெறுவது எனக் கூறியிருக்கிறார். கோயில் சொத்து வாடகை 2012ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 விழுக்காடு வாடகை உயர்வு, தொடர்ந்து குழு அமைத்து ஆய்வு செய்து, ஓரிரு மாதங்களில் சரிசெய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க: சசிகலா எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும் நயினார் நாகேந்திரன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.