ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபிஸ் கட்ட 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்படும் கோயில் நிலம்

author img

By

Published : Dec 7, 2022, 8:10 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை 30ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட இருப்பதாக, இந்துசமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட 30 அண்டுகள் கோயில் குத்தகை
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட 30 அண்டுகள் கோயில் குத்தகை

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை காலவரம்பு இல்லாமல் குத்தகைக்கு விடப்படுகிறதா? என்பது குறித்து விளக்கமளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச்சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மாதம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு, 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும். வழங்கப்பட்ட நோக்கத்திற்கு அல்லாமல் வேறு நோக்கத்திற்காக நிலத்தைப் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்டப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன'' என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள் பட்டியிலிடப்படாததால், அனைத்து வழக்குகளையும் சேர்த்து பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சன் பார்மா நிறுவனத்திற்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.