ETV Bharat / state

எம்ஜிஆர் வழங்கிய நிலத்திற்கு பட்டா தர கோரிக்கை..40 ஆண்டுகளாக ஒலிக்கும் நரிக்குறவர் மக்கள் வேதனைக்குரல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 9:37 PM IST

Updated : Aug 27, 2023, 8:04 PM IST

Narikuravar People Demand Patta: 40 ஆண்டுகளாக தங்கும் இடத்திற்க்கு பட்டா இல்லாததால் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஈரோடு ரங்கம்பாளையம் நரிக்குறவ இன மக்களின் இன்னல்கள் குறித்த ஈடிவி பாரத்தின் சிறப்பு செய்தி தொகுப்பு.

பட்டா வழங்க கோரிக்கை
நரிக்குறவ இன மக்கள்

ஈரோடு நரிக்குறவர் சமூக மக்களின் பட்டா பிரச்சனை

ஈரோடு: தமிழகத்தில் வாழும் நரிக்குறவர் இன மக்களுக்கு கடவுளாக இன்றும் திகழ்பவர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 'ஒளிவிளக்கு' படத்தில் நரிக்குறவ இன மக்களை போன்று வேடமிட்டு ஊசி மணி, பாசி மணிகளை அணிந்து அவர்களது வாழ்க்கை நிலையை உலகிற்கு எடுத்துக்கூறும் விதமாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்கள்.

அந்த படத்தின் பாடலுக்கு பிறகுதான் நரிக்குறவ இன மக்களின் மீது மற்ற மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு உண்டானதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வந்த திரைப்படங்களில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகர் வடிவேலு போன்ற பல நகைச்சுவை நடிகர்களும் நரிக்குறவர் இன மக்களின் வாழ்கையை எடுத்துக்கூறும் வகையில் படங்கள் நடித்து இருந்தனர்.

இதைபோன்று எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும், நரிக்குறவ இன மக்களின் வாழ்க்கை இன்றும் போராட்டமாகதான் உள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆனாலும், மனிதனின் அடிப்படை உரிமைகளான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் என்பது இம்மக்களுக்கு ஒரு எட்டா கனியாகவே உள்ளது.

வெயிலிலும் மழையிலும் வாடிய குடும்பங்களுக்கு எம்ஜிஆர் அளித்த 'நிலம்': ஊர் ஊராக கோயில் திருவிழா மற்றும் கிராமக்களுக்கு சென்று ஊசி மணி, பாசி மணி, சாந்து பொட்டு, கருகமணி, கண் மை, குழந்தைகளுக்கு பால் பாசி எனப் பல வகையான பொருட்களை விற்பனை செய்து வாழும் நரிக்குறவ இன மக்களுக்கு இருப்பிடம் என்பதே ஒரு பகல் கனவாகவே உள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இம்மக்கள், ஈரோடு நகரில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் பகுதியில் உள்ள டீசல் செட் என்னும் இடத்தில் முன்பு சாலையோரம் பழைய துணியால் குடிசை அமைத்து மழையையும் வெயிலையிம் எதிர்கொண்டு சாலையோரமே சமைத்து சாப்பிட்டு கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஈரோட்டில் இருந்து சென்னிமலை அந்த சாலை வழியாக சென்ற முன்னாள் முதலைமைச்சர் எம்.ஜி.ஆர், சாலையோரம் நரிக்குறவ இன மக்கள் அவதிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு வாழ்வதற்கென ரங்கம்பாளையம் என்ற பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அந்த இடத்தில்தான் தற்போது வரையில் நரிக்குறவர் இன மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

எங்களுக்கு 'பட்டா' இருந்தா போதும்: அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிசைகளை கட்டிகொள்ள, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், தற்போது வரையிலும் அங்கு வாழும் நரிக்குறவ இன மக்களுக்கு இடத்திற்கான 'பட்டா' வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் இவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர், சாக்கடை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். ரங்கம்பாளையம் நரிக்குறவ இன மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் முறையிட்டு இதற்காக கோரிக்கை வைத்த நிலையில், குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இருந்தால்தான் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியும் என்றும் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் கோகிலா என்பவர் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி வருவதாகவும், அவை அனைத்தும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கே போதாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வாழும் இடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினார்.

ஓட்டுக்காக தேடும் பல கட்சிகள்; எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை: திமுக, அதிமுக என பல கட்சிகளை சேர்ந்தவர், தேர்தல் நேரத்தில் பிரசார நேரத்தில் புகைப்படம் எடுத்துகொள்ள மட்டும் நரிக்குறவ இன மக்களை சந்தித்து, "எங்களுக்கு வாக்களியுங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நரிக்குறவ இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கைகள் எடுப்போம்" எனக் கூறிவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நரிக்குறவர் இனமக்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் மறந்து விடுவதாக கூறப்படுகின்றது.

ஊசி பாசி விற்போரிடமும் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு: இன்னும் ஒரு படி மேலாக, குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறும் அதிகாரிகள், 4 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்பதாக கூறப்படுகிறது. பல சவால்களுக்கு நடுவே நரிக்குறவ இனப் பெண்கள் அன்றாடம் ஊசி மணி, பாசி மணியும் விற்றும், ஆண்கள் இரண்டு சக்கர வாகனத்தில் பொம்மை, விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வந்தாலும் தற்போதுள்ள விலைவாசி உயர்வில் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.

எம்ஜிஆர் அளித்த நிலத்திற்கு 'பட்டா' வழங்க கோரிக்கை: இதற்கிடையே, தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் படிக்க வைக்கவும், கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்க வைக்கவும் பலகட்ட போராட்டங்களை தினமும் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் பட்டதாரியான பின்பும், வேலை இல்லாமல் தங்கள் பிள்ளைகள் தவிப்பதாக நரிக்குறவ இன மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தங்களுக்கு கொடுத்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கி, வீடுகள் கட்டி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இக்கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளோம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையின் அடையாளமான கானா உருவானது எப்படி? - விளக்குகிறார் கானா முத்து!

Last Updated : Aug 27, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.