ETV Bharat / state

4ஆவது நாளாக பெய்யும் தொடர் கனமழையால் அந்தியூர் ஏரிகளில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றம்

author img

By

Published : Jan 16, 2022, 6:31 PM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமங்கள் மற்றும் வனப்பகுதிக்குள் நான்காவது நாளாக இன்றும் கனமழை பெய்ததில் ஏரிகளில் இருந்து அதிகமான உபரி நீர் வெளியேறியது.

நான்காவது நாளாக பெய்யும் தொடர் கனமழையால் அந்தியூர் ஏரிகளில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றம்
நான்காவது நாளாக பெய்யும் தொடர் கனமழையால் அந்தியூர் ஏரிகளில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றம்

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமங்கள் மற்றும் வனப்பகுதிக்குள் நான்காவது நாளாக இன்றும் கனமழை பெய்தது.

புதுக்காடு, காந்தி நகர், ஊஞ்சகாடு மற்றும் வனப்பகுதிக்குள் நான்காவது நாளாக இன்று அதிகாலை கனமழை பெய்ததன் காரணமாக, ஏரிகளில் இருந்து அதிகமான உபரி நீர் வெளியேறி வருகிறது.

அதிகளவில் பெய்து வரும் மழை:

வழக்கமாக மார்கழி, தை மாதங்களில், பனிப்பொழிவு இருக்கும். ஆனால், அந்தியூர் பகுதியில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக கடந்த 4 தினங்களாகக் கனமழை கொட்டி வருகிறது.

கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த கனமழை முதல் நாளில் 6 சென்டிமீட்டர் மழையும், இரண்டாவது நாளில் 9 சென்டி மீட்டர் மழையும், மூன்றாவது நாளில் 3 சென்டி மீட்டர் மழையும், நான்காவது நாளான இன்று(ஜன 16) அதிகாலை 5 சென்டி மீட்டர் மழையும் பெய்தது.

இதன் காரணமாக ஏற்கெனவே கடந்த மாதங்களில் நிரம்பிய நீர் நிலைகளில் இருந்து, தற்போது அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருகிறது.

முக்கிய நீர் நிலைகளான அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, பிரம்மதேசம் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவது அந்தியூர் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது நாளாகப் பெய்யும் தொடர் கனமழையால் அந்தியூர் ஏரிகளில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றம்

வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்பு:

இன்னும் அந்தியூர் அருகே உள்ள ராசாங்குளம் ஏரி மட்டும் முழுமையாக நிரம்பாமல் உள்ளது.

இந்த ஏரியில் தற்போது 95% தண்ணீர் உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு நீர்வரத்து சென்று கொண்டுள்ளது. எனவே, நாளைக்குள் இந்த ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டி, இந்த ஏரியின் உபரி நீர் வெளியேறினால், அந்தியூரில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் இந்த ஆண்டு நிரம்பி வரலாற்றில் இடம் பிடிக்கும் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக கடந்த 2005-2006ஆம் ஆண்டு தான், அந்தியூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெய்த திடீர் கன மழையால் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.