ETV Bharat / state

பழனி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது தங்க‌நகைகளைத் திருடிய பெண் ஊழியர் கைது!

author img

By

Published : May 20, 2022, 6:00 PM IST

பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்க‌நகைகளை திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்க‌நகைகளை திருடிய பெண் ஊழியர் கைது
கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்க‌நகைகளை திருடிய பெண் ஊழியர் கைது

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி கடந்த புதன்கிழமை(மே 18) பழனி கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

நூதனத் திருட்டு: அப்போது பழனி கோயிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பாக்கியலட்சுமி(44) என்ற ஊழியர் ஒருவர், உண்டியல் காணிக்கைகள் எண்ணும்போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாகத் திருடியுள்ளார். அப்போது உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கோயில் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பாக்கியலட்சுமியை கோயில் ஊழியர்கள் சோதனையிட்டதில் காலில் நகையை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாக்கியலட்சுமி மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

அடுத்தடுத்து அதிகரிக்கும் திருட்டுச்சம்பவங்கள்: உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோயில் இணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில், சிசிடிவி கேமரா கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று முறை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோயில் ஊழியர் ஒருவர் ரூ.90,000 திருடியதும், கடந்த மாதம் தங்கத்தினால் ஆன வேல் ஒன்றை துப்புரவுப் பணியாளர் கணேசன் என்பவர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பெண் ஒருவர் திருடி, அகப்பட்டு சிறைக்கு சென்றுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி சரியாக நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் தற்போது பக்தர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 'பேத்தியை காதலிக்காதே...' கண்டித்த தாத்தா படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.