ETV Bharat / state

இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி!

author img

By

Published : Feb 7, 2023, 6:55 PM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்களின் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.

இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜப்தி!
இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜப்தி!

திண்டுக்கல்: மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு கடந்த 1985ஆம் ஆண்டு செட்டி நாயக்கன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அப்போதைய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி 55 விவசாயிகளிடமிருந்து 215 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோன்மணி என்பவர், 10 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி உள்ளார். இதற்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.5,500 வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதனை ஏற்காத மனோன்மணி திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், 30 சதவீதம் ஆறுதல் தொகையும், 15 சதவீதம் வட்டியும் வழங்க உத்தரவிட்டது. இதனை ஏற்காத விவசாயி மனோன்மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் இழப்பீட்டுத்தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2012ஆம் ஆண்டு ஏக்கருக்கு ரூ.2.5 லட்சமும், 30 சதவீதம் ஆறுதல் தொகையும், 15 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகை மனோன்மணிக்கு வழங்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டுத்தொகையான ரூ.77 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும்; இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்று கார்கள் மற்றும் தளவாட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று 07.02.23 பாதிக்கப்பட்ட விவசாயி மனோன்மணி, அவரது வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கார் மற்றும் தளவாட சாமான்கள் ஆகியவற்றை ஜப்தி செய்ய வருகை தந்தனர்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நின்றிருந்த காரை ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும், தளவாட சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் சம்பந்தப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:வாட்ஸ்அப்பில் இனி "வாய்ஸ் ஸ்டேட்டஸ்" வைக்கலாம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.