ETV Bharat / state

பழனி அருகே கோயில் நிலத்தைச் சுற்றி வேலி அமைப்பு - தடுக்கச் சென்ற சமூக ஆர்வலரை தாக்கியதாக குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 6:35 PM IST

Dindigul news: பழனி அருகே கோயில் இடம் பிரச்னை சம்பந்தமாக நிலத்தை பார்வையிடச் சென்ற சமூக ஆர்வலர் அசோக் என்பவரை பழனி டிஎஸ்பி கடுமையாக தாக்கியதாகக் கூறி முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

திண்டுக்கல் சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
திண்டுக்கல் சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

திண்டுக்கல் சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

திண்டுக்கல்: பழனி, நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மண்டுகாளியம்மன் கோயிலில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்கு 1950ஆம் ஆண்டுக்கு முன்னதாக பெருமாள் சாமி நாயுடு என்பவர், 1.19 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தை தற்போது அவருடைய மகன் பெரிய ராமசாமி பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 1996ஆம் ஆண்டு இந்த நிலத்தில் உள்ள 30 சென்ட் நிலத்தை பெரிய ராமசாமி, ராமசுப்பு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு தானமாக கொடுத்த இடத்தை விற்பனை செய்ததால், 2013ஆம் ஆண்டு இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு, 2021ஆம் ஆண்டு தான பூமி நிலத்தை விற்பனை செய்தது செல்லாது என்றும், இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கோயில் நிலம் தங்களுக்கு வேண்டுமென, அவ்வூர் மக்கள் வருகிற 29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கோயில் நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளனர்.

வேலி அமைப்பதைத் தடுக்க ஊர் மக்களோடு தலைமையேற்று வந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவரை, டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அசோக்குமார் பேசி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர், “டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர், என்னை வாகனத்தில் ஏற்றி கடுமையாகத் தாக்கினர். பின்னர் என் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம், நான் திண்டுக்கல் மாவட்டத்தில் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிப்பதை தடுத்துள்ளேன், வையாபுரி குளம் மாசடைவது, ஆக்கிரமிப்புகள் குறித்த 7 பொதுநல வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளேன் என்று கூறினேன்.

மேலும், தனக்கு காவல் துறை பாதுகாப்பு தர உத்தரவிட்டும் காவல் துறை பாதுகாப்பு வழங்கவில்லை. நீதிமன்றம் துப்பாக்கி வழங்க உத்தரவிட்டு, இன்னும் அனுமதி வழங்கவில்லை உள்ளிட்ட நியாயங்களை எடுத்துக் கூறியதால், நீதிபதி சொந்த ஜாமினில் வெளியே அனுப்பினார்.

காயமடைந்த எனக்கு சிகிச்சைக்காக பழனியில் உள்ள வேல் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட என்னை, காவல் துறையினர் தொந்தரவால் வெளியேற்றப்பட்டு, தற்பொது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தன்னை தாக்கிய டிஎஸ்பி சரவணன் மீது முதலமைச்சர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணச் செலவுக்காக திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.