ETV Bharat / state

9ம் வகுப்பு இளம் விஞ்ஞானி.. குறைந்த விலையில் பேட்டரி சைக்கிள் தயாரித்து சாதனை..

author img

By

Published : Aug 11, 2023, 10:14 AM IST

Updated : Aug 11, 2023, 10:20 AM IST

பழனி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் குறைந்த விலையில் பேட்டரி சைக்கிள் தயாரித்து சாதனைப் படைத்ததையொட்டி, மாணவரின் விடா முயற்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

குறைந்த விலையில் பேட்டரி சைக்கிள் தயாரித்து அசத்திய 9ம் வகுப்பு இளம் விஞ்ஞானி
குறைந்த விலையில் பேட்டரி சைக்கிள் தயாரித்து அசத்திய 9ம் வகுப்பு இளம் விஞ்ஞானி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆய்க்குடியைச் சேர்ந்தவர், ஜெயசீலன். இவரது மகன் அபினவ் சஞ்சய். அங்குள்ள பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில நாட்களாக அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனையடுத்து, மாணவனின் ஆர்வத்தைத் அறிந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் முழு ஊக்கத்தையும் அளித்துள்ளனர்.

இதனால் உற்சாகம் அடைந்த மாணவன் அபினவ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உதவியோடு பேட்டரி சைக்கிள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது பார்வையும் எலக்ட்ரிக் வண்டிகள் பக்கம் திரும்பியுள்ளது.

இதை நன்கு அறிந்த அபினவ் சஞ்சய் தனது சொந்த தயாரிப்பில் குறைந்த விலையில் பயன் தரக்கூடிய எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளார். இதுகுறித்து மாணவன் அபிநவ் கூறுகையில், “எனக்கு சிறுவயது முதலே ஒரு சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் (Scientist) என்கின்ற கனவு இருந்து வருகிறது. அதற்கு எனது ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் உறுதுணையாக இருக்கின்றனர்.

எனது கனவின் ஒரு பகுதியே இந்த எலக்ட்ரிக் சைக்கிள். இதை இரண்டு வாரங்களில் தயாரித்து முடித்திருக்கிறேன். இதைத் தயாரிக்க எனக்கு பேட்டரி, மோட்டார், முகப்பு விளக்கு, சார்ஜிங் பாய்ண்ட், ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. கடைகளில் புதியதாக பேட்டரி சைக்கிள் வாங்கினால் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், நான் தயாரித்த இந்த சைக்கிளுக்கு வெறும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது.

இந்த சைக்கிளை நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒரு யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். வெறும் 4 ரூபாய் செலவில் 20 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையிலும், 200 கிலோ பாரத்தைச் சுமந்து செல்லும் வகையிலும் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இளைய சமுதாயத்தின் மேல் பல்வேறு எதிர்பார்ப்புகளும், பொறுப்புகளும் தினம்தோறும் திணிக்கப்பட்டு வரும் சூழலில், அந்த எதிர்பார்ப்புகளை உண்மையாக்கும் மாணவர்கள் செயல் நம்பிக்கை தன்மையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

அதைத் தொடர்ந்து, புதிய பேட்டரி சைக்கிளை தயாரித்த அபினவ் சஞ்சய், அதை தனக்கு ஊக்கமளித்த பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையிலும், தனது முயற்சிக்கு வித்திட்ட பள்ளி வளாகத்திலும் வைத்து பயணித்து காட்டி அசத்தினார். மேலும் மாணவர் அபினவ் இது வெறும் தொடக்கமே என்பதை கூறும் வகையில், தான் அடுத்ததாக பேட்டரி டிராக்டர் தயாரிக்க இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நந்தி சிலை மீது நின்று சிவனை தரிசித்த நாகம் - பக்தியில் திளைத்த பொதுமக்கள்!

Last Updated : Aug 11, 2023, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.