ETV Bharat / state

"ஊழல், குடும்ப அரசியலில் திழைத்து இருக்கும் திமுக" - தருமபுரி திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி விளாசல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 5:09 PM IST

Edappadi palanisamy: தருமபுரியில் அதிமுக பேரவை செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமணத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

தருமபுரியில் நடைபெற்ற அதிமுக பேரவை செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழா
தருமபுரியில் நடைபெற்ற அதிமுக பேரவை செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழா

தருமபுரியில் நடைபெற்ற அதிமுக பேரவை செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழா

தருமபுரி: தருமபுரி மாவட்ட அதிமுக பேரவை செயலாளர் வெற்றிவேல் மகள் திருமணம் தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் இன்று(நவ.19) நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மணமக்களை வாழத்தினார். இது மட்டுமின்றி இந்த விழாவில் கூடுதலாக 100 ஏழை ஜோடிகளுக்கும் இலவச திருமணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து, திருமணம் நடைபெற்ற 100 ஜோடிகளுக்கும் சீர்வரிசையை வழங்கினார்.

திமுகவின் கணக்குப்படி பாஜகவின் பினாமியான அதிமுக: இதனையடுத்து, விழா மேடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இன்று(நவ.19) நடைபெற்ற 100 ஜோடி மணமக்களும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன். அதிமுக ஒரே குடும்பம் என்பதற்கு இதுவே சான்று. அதிமுகவில் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். அதிமுக ஜாதி, மாதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக செயல்பட்டு வருகின்றது. திமுகவை சோ்ந்தவா்கள், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது பொறுத்துக் கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கள்.

பாஜகவுக்கு அதிமுக பினாமியாக செயல்படுவது போலவும் மறைமுகமாக உறவு வைத்திருப்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும், ஏற்கனவே பிரிந்து விட்டோம். வேண்டுமென்றே இதை பொறுத்துகொள்ள முடியாத திமுக தலைவா் ஸ்டாலினும் அவரது சகாக்களும் பேசி வருகிறார்கள். ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகளை ஏமாற்றி வாங்குவதற்காக முயற்சி செய்தனர். தற்போது நாம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.

நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்ட காங்கிரஸ்: மேலும் நீட் தேர்வு குறித்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதி பேசி வருகின்றனர். ஆனால் நீட் தேர்வு கொண்டு வந்தது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காந்திச்செல்வன் மத்திய சுகாதார துறை இணையமைச்சராக இருந்த போதுதான், பிள்ளையார் சுழி போட்டார்கள். இன்று அதை எதிர்ப்பது திமுகவும், காங்கிரஸும் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக்கூடாது என திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தினால் 12 இலட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால் இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார். அதேப்போல் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மக்களின் வசதிக்காக 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்டபட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு அதிக சுழல் நிதி அதிமுக வழங்கியது. இவை அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள்.

ஏழை மக்களின் நண்பன் அதிமுக: ஏழை பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அதிமுக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதனால், சுமார் 2000 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். மேலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தியது. தைப் பொங்கலுக்கு ஏழைகள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 2ஆயிரத்து 500 ரூபாயுடன், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் திமுகவில் ஒழுகும் வெல்லத்தை கொடுத்தார்கள்.பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தவர்கள் தான் திமுக.

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக: எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் வினியோகம் செய்யப்படுகிறது. திமுகவின் தேர்தலில் 520 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் பச்சை பொய் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். அதுவும் முழுமையாக சேரவில்லை.

திமுகவின் சட்டஒழுங்கு சீர்கேடு: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேர்மையாக போராடுகிற விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அமைச்சர் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு சபரிஷன், உதயநிதி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. திமுக அமைச்சரவையில் இருக்கும் ஒரு நிதியமைச்சரே சொல்லியுள்ளார்.

குடும்ப அரசியலில் சூழ்ந்திருக்கும் திமுக: திமுக ஊழல் செய்வதற்காகவே வந்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். திமுக குடும்ப ஆட்சி. முன்பு கலைஞர் முதலமைச்சரானார். பிறகு ஸ்டாலின் வந்தார், தற்போது உதயநிதியை முதலமைச்சராக்க போகிறார்கள், இது ஒருபோதும் நடக்காது. திமுகவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகளுக்கு வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்" என்று தெரிவித்து, இறுதியாக மணமக்கள் மற்றும் திருமணம் நடைபெற்ற 100 ஜோடிகளுக்கும வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், வெங்கடேஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், வீரமணி, அரூா் எம்.எல்.ஏ. சம்பத்குமார், பாமக எம்.எல்.ஏ.க்கள், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: “ஆளுநர் ரவி கடைந்தெடுத்த சனாதன பேர்வழியாக உள்ளார்” - திருமாவளவன் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.