ETV Bharat / state

சுங்கச்சாவடிகளுக்கு பணம் மீதுதான் அக்கறையா? மக்களின் உயிர் மீது இல்லையா? - செந்தில்குமார் எம்பி

author img

By

Published : Mar 13, 2022, 10:45 AM IST

Updated : Mar 13, 2022, 1:05 PM IST

தர்மபுரி சுங்கச்சாவடி உள்பட ஆறு இடங்களில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. சுங்கச்சாவடிகள் முறையாக பராமரிக்கவில்லை. சுங்கச்சாவடிகள் பணம் வசூலிக்க மட்டுமே செயல்படுவதா, மக்களின் உயிர் மீது அக்கறை இல்லையா என்று காரிமங்கலம் கூட்ரோட்டில் ஆய்வு மேற்கொண்ட பின் தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.

சுங்கசாவடிகளுக்கு பணம் மீதுதான் அக்கறையா
சுங்கசாவடிகளுக்கு பணம் மீதுதான் அக்கறையா

தர்மபுரி: காரிமங்கலம் கூட்ரோட்டில் சாலை விபத்துக்களைத் தவிர்க்க தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் மார்ச் 12ஆம் தேதியான நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, தர்மபுரி எல் அன்டு டி (L.&.T) சுங்கச்சாவடி நிறுவனத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வின் போது செந்தில்குமார் எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு அலுவலர்கள் மழுப்பலாக பதில் கூறியதால், சில நிமிடங்களிலேயே தனது ஆய்வை முடித்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'காரிமங்கலம் கூட்ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் உயிரிழப்பைத் தவிர்க்க அருகில் உள்ள மேம்பாலத்தின் வழியாக வாகனங்களை இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்தேன்.

கேள்விக்கு பதில் இல்லை

அப்போது, எல் அன்டு டி அலுவலர்களிடம் காரிமங்கலம் சாலையில் 2018-2022ஆம் ஆண்டு வரை எத்தனை விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மூன்று என்று பதிலளித்தனர். ஆனால், காவல்துறையின் பதிவேட்டின் படி நான்கு பேர், இப்பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மொத்த விபத்துகள் குறித்த கேள்விக்கு அவர்களிடம் எந்த வித தரவுகளும் இல்லை.

அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை

இப்பகுதியில் ஏறக்குறைய 32 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மேம்பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிக்க தானா?

இப்பகுதியில் ஏற்படும் சாலை விபத்துக்களை சுங்கச்சாவடி அலுவலர்களால் சரிசெய்ய முடியவில்லை. தர்மபுரி சுங்கச்சாவடி உள்பட ஆறு இடங்களில் மட்டுமே சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக உள்ளது. இனிவரும் காலங்களிலாவது முறையாகப் பராமரிக்க வேண்டும். கட்டணம் வசூலிக்க மட்டும் தான் சுங்கச்சாவடிகளா? மக்கள் உயிர்களைப் பற்றி கவலை இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

சுரங்கப்பாதைத் திட்டம்

இந்தியாவில் முதல் நான்கு வழிச்சாலை கலைஞர் ஆட்சியில் தொப்பூரில் அமைக்கப்பட்டது. தொப்பூர் பகுதியில் நடைபெறும் விபத்துக்களைக் குறைக்க 3 திட்டங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ரூ. 3000 கோடி மதிப்பில் சுரங்கவழிச் (Underground) சாலை அமைக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இருக்கக்கூடிய நான்கு வழிச்சாலையை ஒருவழிச்சாலையாக மாற்றவும் ரூ. 366 கோடியில் அறிக்கை தயாராகி வருகிறது. 4 வழிச்சாலைக்கு பதிலாக ஆறு வழிச்சாலையாக மற்றொரு பக்கத்தில் ரூ. 423 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலையை 6 வழிச் சாலையாகத் தரம் உயர்த்தும் திட்டம் மூன்று மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம்

இந்த ஆண்டு பட்ஜெட்டில், தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு (Dharmapuri Morappur Railway Project) குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ரயில்வே பொது மேலாளர் உடன் பேசி, இரண்டரை கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. தாசில்தார் அளவிலான அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அதற்குரிய கோப்புகளைத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

ரயில் பாதைக்கான நில அளவை பணிக்கான குழு தயார் நிலையில் உள்ளது. 3கிமீ நிலத்தை ரயில்வேயிடம் ஒப்படைத்தால் அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும். தொப்பூர் மேச்சேரி சாலை குறித்து தொடர்ந்து வலியுறுத்தியதால் ரூ.13 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது.

கட்டண சலுகை அட்டை

4 வழிச்சாலையாக உள்ள சாலையை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தொப்பூா், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி வழியாக பவானி வரையில் பயணிக்கும் வாகனங்களுக்கு இச்சாலை பயன்படும்.

தர்மபுரி சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகை அட்டை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிலிருந்து 10கிமீ-க்கு வசிக்கக்கூடிய மக்கள் ரூ.150 செலுத்தி மாதாந்திர அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

20 கிமீ தொலைவில் உள்ளவர்கள் ரூ. 300 செலுத்தி மாத அடையாள அட்டையைப் பெறலாம். அதற்கான சுற்றறிக்கை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வழங்கியிருக்கிறார். பொதுமக்கள் இதனைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: சூலூரில் இருபிரிவினரிடையே மோதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

Last Updated :Mar 13, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.