ETV Bharat / state

நேற்று சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது; இன்று சைபர் கிரைம் போலீசாரால் கைது

author img

By

Published : Jun 20, 2023, 3:38 PM IST

சமூக வலைதள பக்கங்களில் பெரியார், கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட பாஜக பெண் ஆதரவாளரை கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: சமூக வலைதள பக்கங்களில் பாஜக விற்கு ஆதரவாகவும் பெரியார், கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளர் 'உமா கார்கி' என்பவர் தற்போது கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நேற்றைய (ஜூன் 19) தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருதை வழங்கிய நிலையில் இன்று (ஜூன் 20) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் உமா கார்க்கி, நடிகர் விஜய் மாணவர்களிடையே உரையாற்றிய நிகழ்ச்சியின் போது பெரியார் ஆகியோரை பற்றி படியுங்கள் எனக் கூறியதற்கும், விஜய் குறித்து அவதூறான கருத்தை இவர் பதிவிட்டிருந்தார். உமா கார்க்கி வேறொரு வழக்கிற்காக சென்னை எழும்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாளை (ஜூன் 21) விசாரணைக்காக ஆஜராக இருந்த நிலையில் இன்று (ஜூன் 20) கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது பதிவிற்கு பல்வேறு எதிர்ப்புகளும் புகார்களும் எழுந்து வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உமா கார்கி கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "உமா கார்கியை கைது செய்ததற்கு பாஜக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இது திமுகவின் கோழைத்தனத்தை தான் காட்டுகிறது. தேசிய மகளிர் ஆணைய தலைவி குறித்து அவதூறாக பேசியவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டால் அதற்கு நீங்கள் மறுக்கருத்து பதிவிடுங்கள், உங்களால் அந்த பதிவில் உள்ளதை மறுக்க முடியாமல் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தியது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறீர்கள். இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். இது போன்ற சமயங்களில் நெஞ்சு வலிக்கிறது என்று தரையிலும் காரிலும் உருள மாட்டோம்" என அமைச்சர் செந்தில் பாலாஜியை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு பெண்ணை காலையில் கைது செய்வதற்கு திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது? எதையும் நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் எங்களுக்கும் சட்டம் தெரியும். மத்திய அரசும், நீதிமன்றமும் நீங்கள் செய்வதை பார்த்துக் கொண்டுதான் உள்ளது. உமா கார்கி கலைஞரைப் பற்றி பதிவிட்டிருந்தால் அது தவறு என நிரூபியுங்கள், நான் கூறுகிறேன் அவர் கலைஞரைப் பற்றி பதிவிட்டது சரிதான். கலைஞர் ஊழல்வாதி தானே? அது இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? சர்க்காரியா கமிஷனே கலைஞர் ஊழல்வாதி தான் என்று அந்த காலத்திலேயே கூறியுள்ளது.

திருட்டு ரயில் ஏறி வந்த கும்பலுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது. ஒவ்வொரு கைக்கடிகாரத்தையும் 5 கோடி ரூபாய், 10 கோடி ரூபாய்க்கு கட்டி உள்ளீர்கள். இது குறித்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கைது செய்து வருகிறீர்கள். பாஜக தொண்டர்களை கைது செய்யும் இந்த வேகத்தை தமிழக அரசின் திட்டத்தில் காண்பித்து இருந்தால் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக வந்திருக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: PM Modi US visit: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.