ETV Bharat / state

முதலமைச்சரின் பொய்யான பரப்புரை: பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்

author img

By

Published : Jul 11, 2023, 4:30 PM IST

ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து  பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் தமிழ்நாடு முதல்வர்
பிரதமர் மோடி குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் தமிழ்நாடு முதல்வர்

கோயம்புத்தூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் மோடி மற்றும் அவர் அறிவித்த திட்டங்கள் குறித்து பேசினார். இதற்கு தமிழ்நாடு பாஜகவினர் தங்கள் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை என, பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய் நிறைந்த தகவலை பரப்பி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது.

ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் ஸ்டாலினும், திமுக கட்சியின் அமைச்சர்களும், தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த பொய்யான தகவலை திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசிய பொய்யான கருத்திற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.