ETV Bharat / state

மலை ரயிலின் டிக்கெட் பரிசோதகர் ஓய்வு - மெல்லிசையால் மயக்கியவரை வாழ்த்தி வழி அனுப்பிய பயணிகள்!

author img

By

Published : May 1, 2022, 8:27 AM IST

மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

மலை ரயிலின் டிக்கெட் பரிசோதகர் ஓய்வு
மலை ரயிலின் டிக்கெட் பரிசோதகர் ஓய்வு

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர் வள்ளி. இவர், ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளை தனது இனிமையான குரலால் பாடல்கள் பாடி மகிழ்விப்பார். மலை ரயிலை பொறுத்தவரை மேட்டுப்பாளையத்தில் இருந்து 7:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 10 மணியளவில் குன்னூர் ரயில் நிலையம் சென்றடையும். கல்லார் முதல் ரன்னிமேடு ரயில் நிலையம் வரை மலை ரயில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

மூன்று மணி நேரம் பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதைப் போக்குவதற்காக மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருந்த வள்ளி தனது இனிமையான குரலில் சினிமா பாடல்களை பாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பார். மலை ரயிலில் பயணிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வள்ளியின் பாடல்களுக்கு அடிமையானவர்கள். இவரது பாடல்களை ரசித்து கேட்டு செல்வது மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

மலை ரயிலின் டிக்கெட் பரிசோதகர் ஓய்வு

கடந்த 1985ஆம் ஆண்டு தென்னக ரயில்வேயில் பாலக்காடு ரயில் நிலையத்தில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்த வள்ளி, தனது கடின உழைப்பாலும் தொடர்ந்து ரயில்வே துறையில் பல்வேறு தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றதன் மூலமும் டிக்கெட் பரிசோதகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இந்நிலையில், வள்ளி நேற்று முன்தினம் (ஏப்.29) பணி ஓய்வு பெற்றதையொட்டி, பிரிவு உபச்சார விழா மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் ரயில்வே ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் வள்ளிக்கு ரோஜா மலர் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு வள்ளிக்கு ரோஜா மலர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: தென்காசியில் ஒரு சச்சின்... 6 வயது சிறுவனின் மிகப்பெரிய கனவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.