ETV Bharat / state

கரோனாவால் முடங்கிய சிறு, குறு தொழில்கள்

author img

By

Published : Apr 10, 2020, 7:11 PM IST

Updated : Jun 2, 2020, 3:39 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் பெருநிறுவனங்களை மூடவும் அங்கு வேலைசெய்யும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் சம்பளம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் அவ்வாறே செய்துவருகின்றன. அதேசமயம் சிறு, குறு தொழில் செய்யும் பல நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

Amid COVID-19 lockdown, MESE industries in Coimbatore is heavily affected.
Amid COVID-19 lockdown, MESE industries in Coimbatore is heavily affected.

கோவையில் செயல்படும் அனைத்து சிறு, குறு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை செய்யும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கே சென்றுவிட்டனர்.

இதனால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, தூசு படிந்து காணப்படுகிறது. இதனால் தெரு நாய்கள் அங்கு சென்று இளைப்பாறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தமிழ்நாடு சிறு தொழில் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், "தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் நடைபெற்றுவருகின்றன.

ஏற்கனவே பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு எழ முடியாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் கரோனா பாதிப்பு ஊரடங்கு மேலும் வருத்தமடையச் செய்கிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகிறார்கள். தற்பொழுது பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவினால் வேலைசெய்யும் அனைத்து மக்களின் வாழ்வாதாரம், அவர்களைக் காக்கும் எங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

இந்தியளவில் பெரும்பாலான பணி ஆணைகள் (ஜாப் ஆர்டர்) பெற்று இயந்திரங்கள் தயாரிக்கும் இடம் கோவை. ஆனால் தற்போது பணி ஆணைகள் கிடைக்காமல் கூலியும் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். அரசு அறிவித்த மூன்று மாத வங்கிக் கடன் தள்ளிவைப்பு என்பது ஒருபுறம் இருப்பினும் கடனுக்கான வட்டி விகிதங்களைப் பற்றி ஒன்றும் கூறாதது வட்டி அதிகமாகிவிடுமோ என்று அச்சமும் எழுகிறது.

ஏற்கனவே நெருக்கடியும், சிக்கலும் உள்ள நிலையில் தொழிலாளிகளுக்கு ஊதியம் அளிப்பது பெரும் சிரமமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளமும், இங்கு தங்கி வேலைபுரியும் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் வழங்கியுள்ளோம். சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்குப் பின் அரசானது பெருவாரியான சிறு, குறு தொழிலாளர்களிடமிருந்து அதிகமான அபராதம் வசூலித்துள்ளது. அதைத் தற்போது வழங்கினால் பேருதவியாக இருக்கும்.

குறுந்தொழில் முனைவோர்களைப் பொறுத்தவரை வங்கிகளில் கடன் வாங்கவே பெரும் சிரமமாக உள்ள நிலையில் வங்கிகள் அறிவித்துள்ள இந்தக் கடன் திட்டங்கள் ஏதுவாக இருக்காது. எனவே வங்கிகளில் தொழிற்சாலைகளின் பெயரில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டு லட்சம் ரூபாயை வட்டியில்லாமல் கடன் அளித்து அரசு உதவ வேண்டும். மாநில அரசு மூன்று மாத காலத்திற்கு மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அவசரகால கடனாகத் தொழில்முனைவோர்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தது இரண்டு லட்சத்திலிருந்து பத்து லட்சம்வரை கடன் அளித்து உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கரோனாவால் முடங்கிய சிறு, குறு தொழில்கள்

தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவதற்குக் குறைந்தது ஓராண்டு காலம் ஆகும் என்பதால் அரசு தங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். சமூக வலைதளங்களில் மேலும் 28 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று செய்திகள் வலம்வரும் நிலையில் அரசு விரைந்து தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள்விடுத்தார்.

அதன்பின் பேசிய தொழிலாளர் சரவணன், ஊரடங்கு உத்தரவினால் தொழில்கள் ஏதும் செய்யாமல் வருமானத்திற்கு சிரமமாக உள்ளதென தெரிவித்தார். முதலாளிகளும் முடிந்தவரை தங்கள் வாழ்வாதாரம் மீது கவனம் செலுத்தி உணவுப் பொருள்கள், ஊதியங்களை அளித்து உதவுவதாகக் கூறிய அவர், ஊரடங்கு உத்தரவு நீட்டித்தால் சம்பளத்திற்குப் பெரும் சிரமாக இருக்கும் என்றார்.

Last Updated : Jun 2, 2020, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.