ETV Bharat / state

கலைஞர் என்னுடைய ஆசான் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் - குஷ்பு

author img

By

Published : Aug 7, 2023, 6:58 PM IST

கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன்; கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்கப் பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும், வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் கூறினார்

Etv Bharat
Etv Bharat

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

கோவை: நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோரும் கேட்வாக் செய்து மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்குப் பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் செய்தியாளர்களுக்கு பேசுகையில், ''ஆகஸ்ட் 7ஆம் தேதி கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். நான் கோவையின் மருமகள் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

குஷ்புவிடம் மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு, அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் ''குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. இப்போது மோடியை அமெரிக்கா அழைத்து கௌரவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி உலகத்திலயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார். அவரது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு, ’’சூப்பர் ஸ்டார் யார் என்பது இப்பொழுது முக்கியமான விஷயமா? எல்லாவற்றிற்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது. கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7ஆம் தேதி தேதி அவருடைய நினைவு நாள், காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கிறேன். கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாகத் தெரியும், வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம்.

கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்குப் பிடிக்கும். இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறிப் பொருட்கள் பயன்படுத்துகின்றோம். கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே வேளையில் நமது கலாசாரங்களை மறந்துவிட வேண்டாம் எனச் சொல்கிறேன்.

பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கான நல வாரியம் உருவாக வானதி இருக்கிறார். நான் இருக்கிறேன். எல்லாருமே சேர்ந்து தான் செய்ய முடியும். கண்டிப்பாக செய்வோம்.

ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை. ஆனால், மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது. நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அதற்கேற்ப ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை” எனவும் தெரிவித்தார்.

மக்கள் சேவை மையம் மூலம் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் 6 அடி சிலையுடன் அமைதிப் பேரணி!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.