ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் நடந்த மோதலில் ஒருவர் கொலை.. கோவையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 7:43 PM IST

Coimbatore Crime News: பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த 2 நபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Coimbatore Crime News
திருமணத்திற்கு மீறிய உறவில் நடந்த மோதல்

கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் ஆனையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வசந்திக்கும், பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று(டிச.12) பாக்கியராஜூம், வசந்தியும் வீட்டில் தனியாக இருக்கும் போது, அங்கு வந்த கதிர்வேல் என்பவருக்கும் பாக்கியராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறி உள்ளது. இதில், ஆத்திரமடைந்த கதிர்வேல் வீட்டில் இருந்த ஸ்குரு டிரைவரால் பாக்கியராஜ் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கதிர்வேலைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே பல ஆண்டுகளாக கதிர்வேலுக்கும், வசந்திக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் பிரிந்து விட்ட நிலையில், வசந்தி பாக்கியராஜூடன் திருமணத்திற்கு மீறிய உறவை ஏற்படுத்தி கொண்டதாகவும், கதிர்வேலைப் பார்க்கும் போதெல்லாம் பாக்கியராஜ் கிண்டலாகப் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்து நேற்று(டிச.12) மதுபோதையில் இருந்த கதிர்வேல் பாக்கியராஜைக் குத்தி கொலை செய்து விட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கதிர்வேல் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பாக்கியராஜ் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே, பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு.. வெள்ள நிவாரணப் பணிக்கு பிறகு சந்திப்பதாக முதலமைச்சர் தரப்பில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.