ETV Bharat / state

போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயலும் மகன்: ஆட்சியரிடம் தாய் புகார்

author img

By

Published : Aug 25, 2020, 2:15 AM IST

கோயம்புத்தூர்: போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் மூத்த மகன் மீது மாவட்ட ஆட்சியரிடம் தாய் புகார் மனு அளித்தார்.

போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயலும் மகன்: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தாய்!
மகன் மீது புகார் மனு

கோயம்புத்தூர் மாவட்டம் சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராமாத்தாள் (90). இவரை, ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது இளைய மகன் சின்னராஜ் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், "என் கணவர் இறந்த பிறகு இளைய மகன் சின்னராஜ் உடன் வசித்து வருகிறேன். கடந்த 2017ஆம் ஆண்டு நான் கீழே விழுந்ததில் இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் செலவை தனது இளைய மகன் சின்னராஜ் கடன் வாங்கி செய்துள்ளார்.

தற்போது இடது கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். இளைய மகன் மட்டுமே கடன் வாங்கி என்னை கவனித்து வருகிறார். எனக்கு விளாங்குறிச்சி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இது பல கோடி ரூபாய் சந்தை மதிப்பு பெறும்.

இந்நிலையில், எனது மூத்த மகன் மாணிக்கம் நோட்டரி வழக்குரைஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்து 22 பேரிடம் முன்தொகை வாங்கி இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். இதனால், மூத்த மகன் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுத்து, எனது சொத்தை மீட்டு தர வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.