ETV Bharat / state

மேலும் ஒருவர் மாயம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஈஷா மையம்!

author img

By

Published : Mar 6, 2023, 12:44 PM IST

15 ஆண்டுகளாக ஈஷா தங்கிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோவை: திருப்பூர் மாவட்டம், அவினாசியைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி சுபஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி யோகா பயிற்சிக்காக கோவையில் உள்ள ஈஷா பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். ஒருவார காலம் பயிற்சிக்குப் பின், அவரை வீட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்ல அவரது கணவர் பழனிக்குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது மனைவி இங்கு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

தனது மனைவி இல்லையெனில், வேறு எங்கு சென்றார் என ஈஷா யோகா மையத்தினரைக் கேட்டபோது, வரவேற்பு அறையில் இருந்த சிசிடிவி கேமராவை பரிசோதனை செய்தபோது அவர் கால் டாக்ஸி ஒன்றில் ஏறிச் சென்றது தெரியவந்தது. பின்னர், இதுதொடர்பாக சுபஸ்ரீயின் கணவர் விசாரித்ததில், கார் ஓட்டுநர் அவரை இருட்டுப்பள்ளம் என்ற பகுதியில் இறக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பழனிக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், கோவை ஈஷா மையத்தின் அருகே துலக்காங்காடு என்ற பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அந்த உடல் காணாமல்போன சுபஸ்ரீயின் உடல் தான் என அவரது கணவர் உள்ளிட்டோர் உறுதி செய்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதனிடயே, அவர் ஈஷா யோகா மையத்தின் உடையுடன் யாரோ தன்னை துரத்தி வருவது போல, வேகமாக சாலையில் ஓடிய வீடியோ ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சியினரும், பிற இயக்கங்களும் போராட்டங்களில் இறங்கின. அத்தோடு, இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு, இந்த வழக்கில் சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா மையத்தில் கலந்துகொண்டுள்ளார் என்றும் பின்னர், அவர் காணமல்போன நிலையில் அவரது கணவர் ஆலந்துறை காவல்நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடபெற்று வருவதாகவும், தொடர்ந்து அவர் சடலமாக துலக்கங்காடு பகுதியில் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், இது குறித்து ஈஷா மையம், செம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, இந்த விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து வெளியே வந்த சுபஸ்ரீயின் மரணம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

மேலும், கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக சென்ற இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஈஷா யோகா மையத்தை மூடவும், ஜக்கி வாசுதேவை கைது செய்து தீவிரமாக விசாரிக்கவும் வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். இதற்காக தனியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன்(45). இவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இணைந்து அவரது பெயரை சுவாமி பவதுதா எனவும் மாற்றிக் கொண்டுள்ளார். பின்னர், கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் இருந்து வந்த கணேசன், கடந்த 28ஆம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உறவினர்களை தொடர்புகொண்டு விசாரித்த போது, அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா ஆலாந்துறை போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈஷாவுக்கு சென்ற பெண் மரணம் : உண்மை வெளிவரும் என ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.