ETV Bharat / state

பொள்ளாச்சி வட்ட செய்திகள்: களைகட்டிய ஆட்டு சந்தை; இமானுவேல் ஆலயத்தில் வாக்குவாதம்

author img

By

Published : Jun 25, 2023, 3:20 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்று உள்ளது. இமானுவேல் ஆலயத்தில் போதகர் மாற்றம் செய்யப்பட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி செய்திகள்
பொள்ளாச்சி செய்திகள்

பொள்ளாச்சி செய்திகள்

கோயம்புத்தூர்: தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையாக உள்ள பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை வாரம்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வரும் ஜூன் 28 மற்றும் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று நடைபெற்றது. அப்போது ஆட்டுச் சந்தையில் கூடுதலாக ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்து உள்ளன. மேலும் வாரந்தோறும் விற்பனையாகும் விலையை விட இன்று சற்று கூடுதலாக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்தப் பொள்ளாச்சி ஆட்டுச் சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான ஈரோடு, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அதிக அளவில் ஆடுகள் வந்து உள்ளதாகவும்; 5 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கோவை, திருப்பூர் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய சந்தையில் வழக்கமாக காணப்படும் கூட்டத்தை விட அதிகமாக கூட்டம் அலை மோதியது. சுமார் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இமானுவேல் ஆலயத்தில் போதகர் மாற்றம் - இரு தரப்பினரிடைய வாக்குவாதம்:

இமானுவேல் ஆலயம் என்ற ஆலயம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அங்கலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்வார்கள். திருச்சி, தஞ்சை திருமண்டலத்தின் கீழ் இயங்கும் இந்த திருச்சபையின் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதகர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிருபாகரன் என்ற போதகர் இங்கு பணியாற்றி வந்த நிலையில், தற்போது லூத்தர் என்ற புதிய போதகர் கமிட்டி சார்பில் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கமிட்டியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் முன் அறிவிப்புகள் ஏதும் இன்றி, நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒரு போதகருக்கு திருச்சபையில் ஐந்து ஆண்டுகள் காலம் பணி செய்ய அனுமதி உண்டு எனக் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது இரண்டு ஆண்டுகளிலேயே கிருபாகரன் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது அந்த திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்வு குறித்து போராட்டம் நடைபெற்றது. பின்பு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பலிக் கூட்டம் நடைபெறும் நாளான இன்று தற்பொழுது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு தரப்பினர் பழைய போதகரை மீண்டும் பணி அமர்த்தப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் தற்போது நியமிக்கப்பட்டுள்ள போதகர் தலைமையிலேயே திருச்சபை இயங்கலாம் எனத் தெரிவித்து உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் இமானுவேல் ஆலயத்தில் குவிக்கப்பட்டு இரு தரப்பினுடைய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு உதவும் திட்டங்களை விஜய் இன்னும் செய்வார் - நடிகர் சதீஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.