ETV Bharat / state

"கைய பாத்துக்கோங்க.. என்ன பண்ணுவாங்கனு தெரியலை" போலீஸ் தேடும் பதட்டத்துடன் ரவுடி வெளியிட்ட வீடியோ

author img

By

Published : Apr 29, 2023, 10:54 PM IST

'கைய பாத்துக்கோங்க.. கால்களை பாத்துக்கோங்க.. எல்லாம் நல்லா தான் இருக்கு; என்ன பண்ணப்போறாங்கனு தெரியல' என கோவையில் ரவுடி அமர்நாத் என்பவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசாரின் கைது செய்தால் கை கால்களை முறித்து விடுவார்கள் என அச்சத்தில் பயந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

இளைஞர் வெளியிட்ட வீடியோ

கோயம்புத்தூர்: கோவை மாநகரில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே மோதிக் கொண்ட சம்பத்தில், அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரவுடி அமர்நாத் என்பவர் 'தனது கை கால்கள் நன்றாக உள்ளது.. எங்களை சுற்றி வளைத்துவிட்டனர்.. என்ன செய்யப் போறாங்க என்று தெரியவில்லை. இந்த வீடியோவை எல்லோருக்கும் பரப்புங்கள்' என்று மிகவும் பரபரப்பாக மூச்சிறைக்க பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, கோவை நகரில் இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொலை சம்பவங்கள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில், ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், காமராஜர்புரம் கௌதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில ரவுடிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். எனினும், கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் தேடுவதை அறிந்த ரவுடிகள் சில வெளிமாநிலங்களுக்கு சென்று பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர்களையும் பிடிப்பதற்காக உதவி ஆணையர் கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கோவையைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டபோது குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்புடைய சுஜி மோகன் என்பவனை பிடித்தனர்.

மேலும், அவனுடன் இருந்த மூன்று பேரை போலீசார் 4 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் புள்ளி பிரவீன், பிரசாந்த் மற்றும் அமர்நாத் என தெரியவந்தது. இதனை அடுத்து, நான்கு பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை கோவை அழைத்து வர உள்ளனர்.

இதனிடையே போலீசார் ரவுடிகளை துரத்தி சென்றபோது அவர்களிடம் சிக்குவதற்கு முன்பு ரவுடி அமர்நாத் என்பவர் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், 'அண்ணா எங்களைப் பிடிக்க போறாங்க.. எங்களை சுத்திட்டாங்க.. நாங்க ஓடிட்டோம். கையை பாத்துக்கோங்க.. கால்களை பாத்துக்கோங்க.. எல்லாமே நல்லா தான் இருக்கு. நானும் நல்லா தான் இருக்கேன்;

ஆனால், பாத்துக்கோங்க என்னைப் பிடிக்க போறாங்க.. என்ன பண்ணுவாங்க? ஏது பண்ணுவாங்கனு எங்களுக்கே தெரியலைங்கண்ணா.. இந்த வீடியோவை எல்லாருக்கும் அனுப்பி நீங்கதான், காப்பாத்துணும் என கேட்டுக் கொள்கிறேன்' என மிகவும் பதட்டத்துடன் மூச்சிறைக்கப் பேசி உள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு முயற்சி - வழக்கறிஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.