ETV Bharat / state

TN Assembly: சட்டப்பேரவைத் தொடர்: ஆளுநர் உரையில் என்ன அம்சங்கள் இருந்தன?

author img

By

Published : Jan 9, 2023, 6:32 PM IST

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் சென்னை மாநகரின் எல்லை, ஐந்து மடங்கு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை

சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்கத் தொடங்கினார். தமிழ்நாடு அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து ஆளுநர் உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் உரையில் கூறியதாவது, "கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு, நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக பெரும் வளர்ச்சியினைக் கண்டுள்ளது. 1960-களில், இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவக் குறியீடுகளில் பின்தங்கி இருந்த தமிழ்நாடு, தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக உயர்ந்து நிற்பதற்கு முழு முதற்காரணம், சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஆட்சி முறையே.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கோட்பாட்டின் விளைவாகவே, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அண்மையில் நடத்திய மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து ஆய்வில், சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் (Social Progress Index) 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு அதிகாரமளித்து, அவர்களின் நலன் காத்துள்ள இந்த திராவிட வளர்ச்சிப் பாதையில் அரசு மேலும் உத்வேகத்தோடு தொடர்ந்து பீடுநடை போடும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சாதனை, நம் முதலமைச்சரின் ஆற்றல்மிக்க தலைமைக்கும், சமூக நீதியையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2 ஆயிரத்து 429 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டு, விநியோக பணியைத் துவக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மழையின் தாக்கம் மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, 261 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் கால்வாய்கள் மற்றும் இதர வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக 1 ஆயிரத்து 335 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 209 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொசஸ்தலையாற்றில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிக முக்கிய மழைநீர் கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த காலங்களில் அதிகளவில் மழை வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளான சென்னை மாநகரின் முக்கியமான பகுதிகள், இந்தப் பருவ மழைக்காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்படைந்தன. மாண்டஸ் புயலையும் வடகிழக்குப் பருவ மழையையும் மிகச் சிறப்பாகக் கையாண்ட அரசுக்கு பாராட்டுகள்.

அலுவல் மொழிப் பயன்பாடு தொடர்பாக, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஏற்கெனவே இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு உள்ளிட்டப் பல மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து சரக்கு மற்றும் சேவை வரி முறையில் இணைந்தன. ஆனால், கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் வரி வருவாய் வீழ்ச்சி அடைந்ததால், மாநிலங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்கும் காலத்தினை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

நடப்பாண்டில், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ், பெறப்பட்ட 17 லட்சத்து 70 ஆயிரம் மனுக்களில், 16லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேலான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்கு, தமிழ்மொழியைக் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டினைப் பேணிக்காக்கவும், தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், அயலகத் தமிழர்களுக்கும், தாய் தமிழ்நாட்டிற்கும் ஒரு பாலமாக இயங்குவதற்கும், அவர்களின் நலனைக் காப்பதற்கும் அயலகத் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினாலும், உணவுப் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 174 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்த 216 தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுத் தேவையான உணவு, உடை, அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் இளைய தலைமுறையின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு, போதைப் பொருட்களின் விநியோகத்தையும் பயன்பாட்டையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் உறுதியாக உள்ளதாகவும் போதைப் பொருட்களின் கடத்தல் தடுப்புச் சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'நம்ம பகுதி நம்ம நியாய விலைக் கடை' என்ற திட்டத்தின்கீழ், 4 ஆயிரத்து 455 பொது விநியோகக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகள், கால்வாய்கள் முன்கூட்டியே கணக்கெடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டதால் பருவமழை நன்றாக பெய்ததாகவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை உரிய காலத்திற்கு 19 நாட்கள் முன்பே திறக்கப்பட்டது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

உழவர்களுக்கு 61 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பிலான குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், காவிரி டெல்டா பகுதியில் 5 லட்சத்து 28 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டதோடு, மாநிலத்தில் சம்பா சாகுபடி இதுவரை 36 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில், பசும்பால், எருமைப் பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுகிறார்கள் என உரையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் பணிகளும், 3 மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் என 982 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 232 தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 10 மீனவர்கள் மட்டும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னோடி முயற்சியாக, காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளத்தேவையான பெருந்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ‘பசுமை காலநிலை நிதியம்’ (Green Climate Fund) தொடங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிட நலன் மட்டுமன்றி, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தமிழர் பண்பாட்டைப் பேணிக்காக்கவும், கழுவேலி, நஞ்சராயன் குளம் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்களையும், அகத்தியர் மலையில் யானைகள் காப்பகத்தையும் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவிலேயே முதல் முயற்சியாக, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தேவாங்கு காப்பகத்தையும், பாக் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பிலுள்ள மாநில விலங்கான நீலகிரி வரையாட்டைப் பாதுகாத்திட ‘நீலகிரி வரையாடுத் திட்டத்தை’ 25 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பில் செயல்படுத்திட உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்; ஈரநில இயக்கத்தின் (Wetland Mission) கீழ், 13 புதிய ராம்சர் தளங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று நாட்டிலேயே முதல் நிலையை தமிழ்நாடு எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் 142அடி உயரத்திற்கு நீர் தேக்கப்பட்டுள்ளதோடு, அணையின் உயரத்தை மேலும் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், பெண்ணையாற்றில் இருந்து கர்நாடக மாநிலம் அனுமதியின்றி தண்ணீரை திசை திருப்பும் பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நதிநீர் தீர்ப்பாயத்தை அமைத்திட வலியுறுத்தி வருவதாகவும் உரையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நீர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 1 ஆயிரத்து 334 கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான ஆறு பெருந்திட்டங்களை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் பயனாக, 2.59 டி.எம்.சி அளவிற்கு கூடுதல் நீரைச் சேமிக்கவும், 6.92 டி.எம்.சி நீரை திரும்ப மீட்டெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசின் தொடர் கண்காணிப்பின் விளைவாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தாமிரபரணி - கருமேனியாறு – நம்பியாறு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்து, 2030ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாடு ஏற்கெனவே எட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் வீட்டிற்கே சென்று கட்டணமின்றி மருத்துவச்சேவைகளை வழங்குவதற்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி, 1 கோடி பேருக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநிலமெங்கும் உள்ள 679 மருத்துவமனைகளில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் விபத்துக்குள்ளானவர்களுக்கு 120 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகள் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்ய, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான JPAL மேற்கொண்ட ஆய்வின்படி, ஆறு மாதங்களில் ஒட்டுமொத்த கற்றல் இழப்பில் 25 சதவீதம் வரை ஈடுசெய்யப்பட்டுள்ளதில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் பெரும் பங்கை ஆற்றியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்களுடன் நடத்தப்பட்ட ‘கல்வி மாற்றம் உச்சி மாநாட்டில்’, இந்த ஆய்வின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்குள், தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும் புரிதலுடன் படிக்கவும், எண்கணிதத்தில் திறன் பெறுவதற்கும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமும் செயல்படுத்தப்படுவதாகவும்ம், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்காக நடப்பாண்டில் 1 ஆயிரத்து 430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 7 ஆயிரத்து 200 புதிய வகுப்பறைகள் 1 ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் உயர்கல்விக்கு வித்திடவே ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம்’ என்ற திட்டத்தை தொடங்கி நடப்புக் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 780 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது" - ஈபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.