ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம்: மாநில அரசை கட்டுப்படுத்துகிறதா மத்திய அரசு?

author img

By

Published : Mar 9, 2023, 7:37 PM IST

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் மாநில அரசை, மத்திய அரசு மறைமுகமாக கட்டுப்படுத்துகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் கூறும் கருத்துக்கள் என்ன என விரிவாக பார்ப்போம்...

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுக்களில் ஈடுபட்டு, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வாரம் தாம்பரம் மற்றும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த இருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த ரீதியில் சட்டம் இயற்றலாம் என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர், மசோதாவில் உரிய திருத்தங்களை செய்து அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடுகள், கடமைகள் என்னென்ன? தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை அவர் கட்டாயம் ஏற்க வேண்டுமா? ஆளுநருக்கான சிறப்பு அதிகாரங்கள் என்ன? என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

"ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்": இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், "இந்திய அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருப்பதாக ஆளுநர் கருதி ஒப்புதல் அளிக்க மறுத்தால், அமைச்சரவை மீண்டும் சட்ட முன்வரைவை ஆளுநருக்கு அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

மீண்டும் மசோதாவை மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒருவேளை ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தருவதாக மாநில அரசு கருதினால், நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் நீதிமன்றங்களும் ஆளுநரின் விளக்கத்தை கேட்குமே தவிர, ஆளுநருக்கு எதிராக உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவுகளை பிறப்பிக்காது" என்றார்.

"நிர்பந்திக்க முடியாது": மூத்த வழக்கறிஞர் சுரேஷ் கூறும்போது, "பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலமாக தங்கள் அதிகாரத்தை மாநில அரசு மீது மறைமுகமாக மத்திய அரசு செலுத்துகிறது. அதனால், மாநில அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் கால தாமதம் செய்கின்றனர். மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்படும் ஆளுநர், மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுவதில் ஆச்சரியமில்லை.

மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை ஒருமுறை திரும்ப அனுப்பினால், மீண்டும் பரிந்துரை செய்யப்படும் போது ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால் தான் பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சட்ட மசோதா மீது 6 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என கூறினாலும், முடிவு எடுக்க ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என்பதால், ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்" எனக் கூறினார்.

தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த மசோதா கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதலுடன் அவசர சட்டம் அமலுக்கு வந்தது.

பின்னர் அவசர சட்டத்துக்கு மாற்றாக, அக்டோபர் 19ம் தேதி சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசியது விமர்சனங்களை ஏற்படுத்தியது. மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆகிய நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் இருந்த ஆளுநர், தற்போது அதை திரும்ப அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சிகளை நேரடியாக சாடி சர்ச்சையில் சிக்கிய "உருட்டு உருட்டு" பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.