ETV Bharat / state

Biryani: பிரியாணி மீது சென்னை மக்களுக்கு அப்படி என்ன காதல்?

author img

By

Published : Dec 26, 2021, 9:25 AM IST

Updated : Dec 27, 2021, 3:46 PM IST

Biryani: சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் சாப்பிடும் போதும் மட்டன் பிரியாணியில் நெல்லி எலும்பை கடிக்கும் போதும் வரும் உணர்வே வேறு என்கின்றனர் சென்னைவாசிகள். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

பிரியாணி
பிரியாணி

Biryani: சென்னையில் பல வகையான உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இளைஞர்கள் வகை வகையான உணவை சுவைக்க வேண்டி பல இடங்களுக்குச் செல்கின்றனர்.

குறிப்பாக பிரியாணியை சாப்பிடுகின்றனர். சிக்கன், மட்டன், இறால் எனப் பல வகையான பிரியாணி உள்ளது. அதில் பாசுமதி அரிசி பிரியாணி, சீரக சம்பா பிரியாணியை அதிகமானோர் விரும்புகின்றனர்.

உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் 2020ஆம் ஆண்டு சென்னையில் 1 நிமிடத்திற்கு 115 பிரியாணி (ஒரு நொடிக்கு 2 பிரியாணி) விநியோகம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தில் புதிதாக இணைந்த 4.25 லட்சம் வாடிக்கையாளர்கள் சிக்கன் பிரியாணியை தான் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 6,04,44,000 பிரியாணியை விநியோகம் செய்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக தரவரிசையில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.

பிரியாணி சுவை

சுவை காரணமாக தான் மக்கள் பிரியாணியை அதிகமாக தேர்வு செய்கின்றனர் என பிரியாணி கடை உரிமையாளர் எபினேசர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிரியாணியில் சேர்க்கும் பொருள்கள் (ingredients) மனம் அதிகம், எளிதில் மக்களை ஈர்க்கக்கூடிய வல்லமை படைத்தது. அதுமட்டுமின்றி பிரியாணியை உண்ணும் மக்கள் உணவு அருந்திய பிறகு நிறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர்.

விழாக்களின்போது முதலில் அவர்கள் பிரியாணியை தான் தேர்வு செய்கின்றனர். அனைத்து வகையான விழாவிற்கும் நாங்கள் பிரியாணியை செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் இரவில் பிரியாணி விற்பனை செய்வதை ஓரளவு குறைத்து விட்டோம். ஏனெனில் அப்பொழுது பிரியாணி சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை" என்றார்.

தெருவுக்குத் தெரு பிரியாணி கடை

இது ஒருபுறம் இருக்க இணையத்தில் ஆர்டர் செய்வதைவிட நேரில் சென்று பிரியாணி உண்பவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் உள்ளது. பிரியாணி மீது அதிக மோகம் உள்ளத்தால், சென்னையில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பிரியாணி கடை வந்துவிட்டது.

கிட்டத்தட்ட 1,000-க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன. சென்னை மட்டுமின்றி மற்ற முக்கிய நகரங்களிலும் இதே நிலை தான். அந்த அளவிற்கு பிரியாணி மீது மக்களுக்கு காதல் அதிகரித்துள்ளது.

கடையில் தான் சாப்பிடுவோம்

சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் (leg piece) சாப்பிடும் போதும் மட்டன் பிரியாணியில் நெல்லி எலும்பை கடிக்கும் போதும் வரும் உணர்வே வேறு என்கிறார் கல்லூரி மாணவர் ராகேஷ் குமார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிரியாணி வாசனை வந்தாலே சாப்பிட்ட திருப்தி அடைந்தது போல் இருக்கும். நான் வாரத்தில் 6 நாள்கள் பிரியாணி சாப்பிடுகிறேன். வீட்டில் பிரியாணி சமைத்தாலும் கடைக்கு சென்று சாப்பிடும் ருசி வருவதில்லை" என்றார்.

விடியற்காலையில் பிரியாணி பிரியர்களுக்காக 2 மணி பிரியாணி, 4 மணி பிரியாணி என நேரங்களை கடை பெயராக வைத்து பிரியாணி கடைகள் செயல்படுகின்றன. இதற்கு என தனிக் கூட்டம் உள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விடியற்காலையில் பிரியாணியை சாப்பிட விரும்புகின்றனர்.

சூடான பிரியாணி

இரவுப் பணி முடித்து காலை வீட்டுக்கு போய் தூங்கும் முன்பு நல்ல சூடான பிரியாணியை சாப்பிட்டு போனால் நன்றாக இருக்கும் என்கிறார் ஐடி நிறுவன ஊழியர் நிர்மல் குமார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "இரவு பணியின்போது விடியற்காலையில் நல்ல பசி எடுக்கத் தொடங்கும். அப்போது முதலில் நினைவிற்கு வருவது சூடான பிரியாணிதான். ஆர்டர் செய்ய முக்கியக் காரணம் அனைத்து வகையான பிரியாணியையும் தெரிந்துகொள்ள முடிகிறது" என்றார்.

பிரியாணி என்றும் அழியாத ஒரு உணவாக இருக்கும்.

இதையும் படிங்க: துள்ளிவருது ஜல்லிக்கட்டு: களமாட காத்திருக்கும் காளைகள்

Last Updated :Dec 27, 2021, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.