ETV Bharat / state

ரயிலில் நெய் கொண்டு செல்ல தடையா? - என்னென்ன பொருட்களை ரயில் பயணத்தில் கொண்டு செல்லலாம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 8:54 PM IST

What things can and cannot be carried during train journey? ரயில்வே அதிகாரிகளின் அறிவிப்புபடி ரயில்களில் இனி என்ன என்ன பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும், எதையெல்லாம் கொண்டு செல்லக்கூடாது என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Madurai train fire accident : ரயில் பயணத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட பொருள்கள்
Madurai train fire accident : ரயில் பயணத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட பொருள்கள்

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த ரயில், மதுரையில் தீ பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து சென்றால் குற்றமாகும் என பல்வேறு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்தும் ரயில்களில் என்ன பொருள்களுக்கு அனுமதி இல்லை என்பது குறித்தும் விரிவாக விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து 63 பேர் கொண்ட குழுவினர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 17ஆம் தேதி ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கோயிலுகளுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர். நேற்று(ஆக.25) நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று(ஆக.26) அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புணலூரில் இருந்து ரயில் மார்க்கமாக மதுரை ரயில் நிலயத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்த நிலையில், இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீ பிடித்துள்ளது. சுமார் 2 மணி நேரம் வரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ரயிலில் திடீரென தீப்பிடித்தற்கான காரணம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், டீ போடுவதற்காக சிலிண்டரை பயன்படுத்திய போது ரயிலில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதில், 10 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பொருட்களை கொண்டு செல்வதில் முன்னதாக ரயில்வே துறை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விபத்தினால் ரயிலில் கொண்டு செல்ல எந்தெந்த பொருட்களுக்கு அனுமதி உண்டு, எந்தெந்த பொருட்களுக்கு அனுமதி கிடையாது என பொது மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக வெடிபொருள்கள், எளிதில் எரியக்கூடிய பொருள்கள், எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை பயணிகள் எடுத்துச் செல்லக்கூடாது. பயணி ஒருவருக்கு 20 கிலோ நெய் வரை கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயிலில் பயணிகள் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை பெட்ரோல், மண்ணெண்ணய், ஸ்டவ் அடுப்பு, பட்டாசுகள் போன்றவற்றை கொண்டு சென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டப்போது,"மதுரையில் நடைபெற்ற விபத்திற்கு எரிவாயு சிலிண்டர் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ரயில்வே சட்டப்படி, ரயிலுக்குள் எளிதாக தீ பிடிக்கும் பொருட்களான எரிவாயு சிலிண்டர்கள், பட்டாசுகள், அமிலம், கிரோஸின், பெட்ரோல், டீசல், வெல்டிங்க், மன்ணென்னை அடுப்பு, ஈரமான தோல்கள், உலர்ந்த புல், இலைகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அரிக்கும் அமிலப் பொருட்கள் போன்றவற்களை எடுத்து செல்ல கூடாது. அப்படி எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 1989-ன் படி, பிரிவு 67, 164, 165 ஆகிய பிரிவுகளின் அது தண்டனைக்குரிய சட்டம் ஆகும்.

இது போல் தனியாக ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் போதோ அல்லது சுற்றுலா பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் பொழுதோ அவர்களிடம் எழுத்துபூர்வமாக எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று எழுதி வாங்கப்படும். இந்த பெட்டியில் இருந்தவர்கள் எல்லாம் சிலிண்டர் வைத்து நாங்கள் சமைத்தோம் என்று கூறி உள்ளனர். சட்டவிரோதமாக சிலிண்டரை கொண்டு சென்று அதை பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் சிலிண்டர் வைத்து சமைத்ததே விபத்துக்கான முழுக்காரணம்" எனக் கூறினார்.

பாதுகாப்பை மீறி எப்படி சிலிண்டரை எடுத்து சென்றிருப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறிய ரயில்வே அதிகாரி, "இவர்கள் உத்திர பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்துள்ளனர். இது போல் மொத்த பெட்டியும் வாடகைக்கு எடுக்கும் போதோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஆன்மிக பயணத்திற்கு வருபவர்களோ ரயில்வே பாதுகாப்பு குழு சார்பில் சோதனை நடத்தப்படும். எப்படி இதை கொண்டு வந்து இருபார்கள் என்று தெரியவில்லை. மேலும், ரயிலில் பயணிப்பவர்கள் எளிதில் தீ பற்ற கூடிய பொருள்களை எடுத்த செல்லாமல் இருக்க அவர்கள் தான் ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் கூறினார்.

விபத்து குறித்து லக்னோ பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் தெரிவித்தது பின்வருமாறு. "லக்னோ சந்திப்பில் இருந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட பெட்டி புறப்பட்டபோது, அதில் சிலிண்டர் போன்ற தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கவில்லை. எங்களது குழுவினர் எப்போதுமே ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிப்பார்கள். ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் சம்பந்தப்பட்ட குழுவினர் சிலிண்டர் எடுத்துச் சென்றதற்கான சாட்சி ஏதுமில்லை. மேலும், அந்த சிலிண்டர் எப்படி ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரையில் நின்று கொண்டிருந்த ரயிலில் தீ பிடித்ததற்கு காரணம் சிலிண்டர் என்று கூறுகின்றனர். எப்போதும் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை ரயில் எடுத்து செல்லக்கூடாது. குறுகிய இடத்தில் அதிக பேர் இருந்ததால் வெளியில் வர சிரமம் ஏற்பட்டிருக்கும். மக்களுக்கே ரயிலில் ஒரு சில பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு இருக்க வேண்டும். ரயிலில் மட்டும் அல்ல, பேருந்து, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது” என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Madurai Train Accident: உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு நிறைவு - நாளை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.