ETV Bharat / state

பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? - மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 6:28 PM IST

Updated : Oct 30, 2023, 10:58 PM IST

MK Stalin Etv Bharat Exclusive Interview: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராகத் தேசிய அளவில் பலமான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் பலம் வாய்ந்த கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக் கட்சிகள் பாஜகவை வீழ்த்த பயன்படுத்தி உத்தி என்ன என்பது குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கவும், பாஜகவை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் கர்நாடகா, குஜராத், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த பொதுத் தேர்தல்கள், அதன் பின்னர் நடந்த இடைத் தேர்தல்கள் என எதிலும் பாஜகவுக்குச் சொல்லும்படியான வெற்றியை அளிக்கவில்லை. இதில் குஜராத் மாநிலம் மற்றும் சற்று விதிவிலக்கு அங்கு பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு ஆட்சியை இழந்தது. இந்த தேர்தல் முடிவு பாஜகவுக்கு ஏற்பட்ட இறங்கு முகத்தைக் காட்டுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

5 மாநில பொதுத் தேர்தல் என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதால் பாஜக வெற்றி பெறத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதனை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தீவிர தேர்தல் பிரசாரத்தைச் செய்து வருகின்றன. இவற்றில் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், பிஆர்எஸ் ஆளும் தெலங்கானா மாநிலங்களின் முடிவுகள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை, மின்னஞ்சல் மூலமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், வடக்கில் வலதுசாரிகளின் பெரும்பலமாக இருக்கும் இந்துத்துவா அடிப்படையிலான ஒருங்கிணைப்பை உடைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறீர்களா? இதனை உடைத்து வாக்குகளைப் பெற இந்தியா கூட்டணியின் உத்தி என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை எதுவும் இல்லை! ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி வாக்குகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். நாங்கள் அரசியல் சட்டம் வரையறுக்கும் கொள்கைகளை நம்பி நிற்கிறோம். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மதித்தல், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது கவனம் குவித்தல் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து நிற்கிறோம்.

ஆகவே, பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிராக உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில் உள்ள வெற்றிவாய்ப்புகளுக்கேற்ப கூட்டணிக் கட்சிகளிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையை ஏற்படுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவதே இந்தியா கூட்டணியின் தேர்தல் உத்தி. அதில் வெற்றி பெற முடியும் என்பதை சமீபத்திய இடைத் தேர்தல்கள், கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் போன்றவை காட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்" என்று இந்தியா கூட்டணியின் தேர்தல் உத்தியை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

Last Updated :Oct 30, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.